இன்று மே 20, உலக தேனீ நாள்
ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று ‘உலக தேனீ நாள்’ (World Bee Day) கொண்டாடப்படுகிறது. வண்டுகளில் ஒரு இனம் தான் தேனீ ஆகும்.
மகரந்தச் சேர்க்கையில் தேனீக்களின் பங்களிப்பினை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. தேனீக்கள் மட்டுமல்லாமல், உலகில் உள்ள நூற்றுக்கணக்கான வண்டு இனங்களைக் கொண்டாட இந்நாள் தொடங்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு, டிசம்பரில் சுலோவீனியாவில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு ஐக்கிய நாடுகள் அவையினைச் சார்ந்த உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்த்தைத் தொடர்ந்து, மே 20 ஐ உலக தேனீ நாள் என்று ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய்ச் சொல்லப்படும் தேனீக்கள் ஆறுகால்கள் (Hexapoda) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை, பூவில் இருந்து தேனை உறிஞ்சி சேகரித்துத் தேனடையில் தேனாகச் சேகரித்து வைக்கின்றன. தேனீக்கள் பூக்களைத் தேடிச் சென்று மகரந்த சேகரிக்கையில், அவற்றை ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குக் கடத்துவதால், பூக்களிடையே சூலுறவு ஏற்பட உதவுகின்றது. இதனால் சில மரஞ்செடிகள் காய்த்து, விதையிட்டு இனம் பெருகுவதில் தேனீக்களின் பங்கு முக்கியமானது. இது தான் மகரந்தச் சேர்க்கை ஆகும்.
பொதுவாக, தேனீக்களின் வாழ்க்கை முறை கவனிக்கத்தக்கது. தேனீக்கள் கூட்டமாய் ஓரினமாய்ச் சேர்ந்து வாழ்கின்றன.பெண் தேனீ தான் அரசியாக (இராணி ) இருக்கின்றது. அதனைச் சுற்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் தேனீக்கள் இனப்பெருக்கதிற்காக மட்டும் இருக்கின்றன.
ஆண் தேனீக்கள் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களைக் பெற்றுக் கொள்ளும் இராணித் தேனீ, அதன் பின்னர், அது இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. ஆண் தேனீக்களிடமிருந்து பெற்ற உயிரணுக்களைக் கொண்டே, அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.
ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் இருக்கும். கூட்டில் ஆண் தேனீக்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதில்லை. ஆண் தேனீக்கள், தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களையேச் சார்ந்து வாழ்கின்றன.












