தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர், புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று தமிழைப் பற்றியும், நாளைய உலகத்தைப் பற்றியும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது என்றும் முழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் மிகப்பெரிய வர்த்தகராக இருந்த கனகசபை, இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
பாரதிதாசன் சிறு வயதிலேயே பிரஞ்சு மொழி பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ் பள்ளியில் பயின்ற காலமே அதிகமாக இருந்தது. தமது பதினாறாம் வயதிலேயே புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமை தேர்வு கருதி புகுந்தார்.
இந்த கல்லூரி ஆங்கிலம், பிரஞ்சு,தமிழ் ஆகிய மூன்று மொழியிலும் பயிற்சி அளித்தது.
தமிழ் மொழிப் பற்றும் அறிவும் நிறைந்தவராக இருந்ததால் இரண்டு ஆண்டில் கல்லூரிலேயே முதலாவதாக தேர்வு பெற்றார். பாரதிதாசனின் சிறப்பை உணர்ந்த அரசு அவரின் 18 வது வயதிலேயே அவரை அரசினர் கல்லூரி தமிழ் ஆசிரியராக பணியில் அமர்த்தியது.
பாரதிதாசன் கண்டழுதுவோம் கிண்டல்காரன் கிறுக்கன் பாரதிதாசன் என்ற பல புனைப் பெயர்களில் புதுவையில் இருந்து வெளியான தமிழ் ஏடுகளில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிர தொண்டராக விளங்கிய பாரதிதாசன் அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றை தனது பாடல்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். இதனால் 1946 ஜூலை 29ஆம் தேதி அறிஞர் அண்ணாவால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பாரதிதாசன் 1954 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நகைச்சுவை உணர்வு மிக்க பாரதிதாசனின் படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு அவர் இறந்த 5 ஆண்டுகள் கழித்து 1969இல் சாகித்திய அகடாமியின் விருது கிடைத்தது
பாரதிதாசனுடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொதுவுடமை ஆக்கப்பட்டன.
பாரதியார் மீது தீவிர பற்று கொண்ட பாரதிதாசன் அவரது மானசீக குருவாக சுப்பிரமணிய பாரதியாரை கருதினார். சிறு வயதிலேயே சிறு சிறு பாடல்களை அழகாக சுவையுடன் எழுதி தமது நண்பர்களுக்கு பாடி காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமண விருந்துக்கு பின் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டு பாடலை பாரதிதாசன் பாடினார். பாரதியாரும் அந்த விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் அது பாரதிதாசனுக்கு தெரியாது அவ்விருந்தில் பாரதிதாசன் பாடிய பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது ஆயினும் அதற்கு முன்பே பாரதிதாசன் பாரதியாரை சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனை பற்றி பெயர் சுட்டாமலேயே ஒரு கைக்கோளச் சாதி தமிழ்க் கவிராயர் தம்மிடம் வந்து “எங்கெங்கும் காணினும் சக்தியடா தம்பி ஏழு கடல் அவள் மேனியடா ” என்று ஒரு பாடலை பாடி காட்டியதாக கூறியிருப்பது இவரே அந்த கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் எங்கெங்கும் காணும் சக்தியடா என்று ஆரம்பித்து இரண்டு பாடல்களை பாடினார். இவரின் முதல் பாடல் பாரதியாரிலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தை சார்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது என்று எழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு பாரதியிடம் இருந்து பாராட்டுக்கள் பெற்றது மட்டுமல்லாமல் அவரது நட்பும் கிடைத்தது. அவருக்கு அன்று முதல் அவர் தனது இயற்பெயரான கனக சுப்புரத்தினம் என்ற என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசன் எழுதிய புகழ்பெற்ற வரிகளில் சில புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம், தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு இந்த வரிகள் எப்பொழுதும் பாரதிதாசனின் பெயரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, நாடகம், சிறு கதை, புதினம்,கட்டுரை, இசை பாடல் என்று பல வடிவங்களில் வெளியிட்டார்.
அம்மைச்சி நாடகம்,உரிமை கொண்டாட்டமா,கடவுளை கண்டேன்,கலை மன்றம், நீலவண்ணன் புறப்பாடு, பிசிராந்தையார் நாடகம் என்பவை அவற்றுள்ள அடங்கும்.
பாரதிதாசன் எழுதிய நூல்கள் அகத்தியன் விட்ட புது கரடி,
இன்பக் கடல், அமிழ்து எது, அழகின் சிரிப்பு, இசை அமுது, முதலாம் தொகுதி மற்றும் இரண்டாம் தொகுதி.
இந்தி எதிர்ப்பு பாடல்கள், இருண்ட வீடு, உலகம் உன் உயிர்,எது இசை? ஏழைகள் சிரிக்கிறார்கள், கண்ணகி புரட்சி காப்பியம், கவிஞர் பேசுகிறார், கற்கண்டு,காதல் பாடல்கள்,காதல் நினைவுகள், குடும்ப விளக்கு ஐந்து தொகுதிகள், குமரகுருபரர், குயில் பாடல்கள், சிரிக்கும் சிந்தனைகள் என பல படைப்புகள் அவர் வாழ்ந்த பொழுதும் அவரின் மறைவிற்குப் பிறகும் வடிவம் பெற்றுள்ளன.
திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசன் ஆவார்.1937 ஆம் ஆண்டில் திரைப்படத்துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதி நாள் வரை அத்துறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல்,பட தயாரிப்பு என பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக் கொண்டே இருந்தார்.
பாரதிதாசன் படங்களுக்கு திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதிய சில திரைப்படத்தின் பெயர்கள்.
பாலாமணி அல்லது பக்கா திருடன், ராமானுஜர், சுலோச்சனா, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி, குமரகுருபரர், பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார்
இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களை தானே சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதி காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.
திரைப்பட பாடல்கள்
பாரதிதாசன் மேலும் திரைப்படத்திற்காக தானே பல பாடல்களை எழுதினார். வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றை சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக் கொண்டனர்.
அதில் 1951இல் வெளிவந்து எம். எஸ். ராஜேஸ்வரி பாடிய ஆர். சுதர்சனம் இசையில் ஓர் இரவு படத்தில் வெளிவந்த துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா,
1954 இல் வெளிவந்த என் மகள் திரைப்படத்தில் எஸ் வரலட்சுமி குரலில் சி.என். பாண்டுரங்கன் இசையில் வெளிவந்த எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்ற பாடலும்,
1965இல் சீர்காழி கோவிந்தராஜன் பி.சுசிலா குரலில் எம். எஸ் விஸ்வநாதன் இசையில் வெளிவந்த கலங்கரை விளக்கம் படத்தில் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்ற பாடலும்,
1966 இல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்து வெளிவந்த சந்திரோதயம் படத்தில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாடலும்,
1970 இல் டி.எம். சௌந்தரராஜன் குரலில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நம்ம வீட்டு தெய்வம் என்ற படத்தில் வந்த எங்கெங்கும் காணினும் சக்தியடா என்ற பாடலும்,
1972ல் டி.எம். சௌந்தரராஜன் குரலில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் நான் ஏன் பிறந்தேன் என்ற பாடலில் வந்த சித்திரை சோலைகளே உம்மை நன்கு என்ற பாடலும்,
1975 இல் டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம் குரலில் கேவி மகாதேவன் இசையில் பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் வந்த புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாடல்களும் இன்றும் நமது காதில் அமிர்தம் போல் ஒலிக்கிறது.
பழனி அம்மையாரை மணந்த பாரதிதாசன் தம்பதியருக்கு சரஸ்வதி கண்ணப்பன் வசந்தா தண்டபாணி ரமணி சிவசுப்பிரமணியன் மன்னர் மன்னன் என்ற பிள்ளைகள் உண்டு.1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி பாரதிதாசன் தமிழ் மண்ணை விட்டு மறைந்தார்












