இயற்கை பாதுகாப்பு – 2026 முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவையொட்டி, விலங்கியல் முதுநிலை மற்றும் ஆய்வுத்துறை, விலங்கியல் அறிவியல் மன்றம் சார்பில், இயற்கை பாதுகாப்பு தினம் – 2026 முன்னிட்டு, “பறவைகளுக்கும் ஒரு வீடு தேவை: செயற்கைப் பறவைக் கூடு அமைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி” என்ற தலைப்பில், தூத்துக்குடி ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 28.07.2026 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்காக விலங்கியல் துறையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் செயற்கைப் பறவைக் கூடுகளைத் தயாரித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு மாணவர்கள் பறவைகள் பாதுகாப்பில் காட்டிய ஈடுபாட்டையும், இயற்கை பாதுகாப்பிற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பான முயற்சிகளையும் பாராட்டினார். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர்.ராதிகா,மாணவர்களின் புதுமைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவித்து, செயற்கைக் கூடு அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
12 மாணவர்கள் மற்றும் மூன்று பேராசிரியர்கள் அடங்கிய குழுவில் முனைவர்.பார்த்திபன், முனைவர் எஸ். பெனாசிர் பேகம் மற்றும் முனைவர். கிருஷ்ணபிரியா ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பல்லுயிர் பாதுகாப்பில் இளம் தலைமுறையினரை பங்கேற்க ஊக்குவித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, விலங்கியல் துறை மாணவர்கள் இயற்கை மற்றும் பாதுகாப்பு என்ற கருப்பொருளில் பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியை வழங்கினர். அதில், பல்லுயிர் வளத்தின் முக்கியத்துவம், பறவைகளைப் பாதுகாப்பதற்காக மாணவர்களும் பொதுமக்களும் எளிமையாக மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தின் பொருத்தமான இடங்களில் செயற்கைப் பறவைக் கூடுகள் பொருத்தப்பட்டன. அவற்றின் அவசியத்தையும் பயனையும் பேராசிரியர்கள் விளக்கி, மரங்களைப் பாதுகாத்தல், பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தவிர்த்தல், பறவைகளுக்கு உகந்த சூழலை உருவாக்குதல் போன்ற வழிமுறைகள் மூலம் பறவைகள் பாதுகாப்பில் மாணவர்கள் பங்காற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, குழுவினருடன் கலந்துரையாடி தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.












