TNPSC Group 2, 2A Exam: குரூப் 2 , 2 A தேர்வு அறிவிப்பு :
காலி பணியிடங்கள் – 645
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 15) முதல் தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 50 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 595 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 13.08.2025 வரை ஆன்லைனில் இத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: குரூப் 2 பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகதேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். குரூப் 2 ஏ பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு இரண்டு பதவிகளுக்கும் ஒன்றாக நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு என்பது முதன்மைத் தேர்வுக்கான தகுதித் தேர்வு மட்டுமே.
முதல்நிலைத் தேர்வு மூன்று பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், 2 ஆம் பகுதியில் திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். மூன்றாம் பகுதியில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்திலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு நடைபெறும் நாள்: 28.09.2025

குரூப் 2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு
இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். இரண்டாம் தாள் பொது அறிவு. 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். பொது அறிவு பகுதியில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதித் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு
இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். இரண்டாம் தாளில் பொது அறிவில் 100 வினாக்கள், திறனறியில் 40 வினாக்கள், தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் 60 வினாக்கள் என 200 வினாக்களுக்கு நடைபெறும். 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150. ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்: ரூ. 100, SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை தயாராக வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.08.2025
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.












