கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கைப்பந்து போட்டியில் முதலிடம் !
நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிருக்கான கைப்பந்து (Hand Ball) போட்டி ஆகஸ்ட் 13 மற்றும் 14, 2026 ஆகிய இரு தினங்களில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுமார் 31 அணிகள் கலந்துகொண்டன.
14.08.2026 அன்று நடைபெற்ற போட்டியில் கோவில்பட்டி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், கருங்கல் அல்போன்சா கல்லூரி அணியும் மோதின. இதில் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 14 – 5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

மற்றொரு அரை இறுதிப் போட்டியில் தூத்துக்குடி ஏ.பி.சி.மஹாலக்ஷ்மி கல்லூரி அணியும், பாளையம்கோட்டை சாரதா கல்லூரி அணியும் மோதின. இதில் சாரதா கல்லூரி அணி 7 – 6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கருங்கல் அல்போன்சா கல்லூரியும், எ.பி.சி.மஹாலக்ஷ்மி கல்லூரியும் மோதின. இதில் எ.பி.சி.மஹாலக்ஷ்மி கல்லூரி 8 – 7 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடம் பெற்றது.

இறுதிப் போட்டியில் கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், திருநெல்வேலி சாரதா கல்லூரி அணியும் மோதின. இதில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 16 – 5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பிடித்தது. சாரதா கல்லூரி அணி இரண்டாம் இடம் பிடித்தது.

வெற்றி பெற்ற அணிக்கு கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் அருணாச்சலம் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் போட்டியின் அமைப்பாளர் முனைவர்.சிவஞானம் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். அகிலா மற்றும் முதல்வர், உடற்கல்வி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.












