‘நீர் எழில் பள்ளி’ திட்டம் :
எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார் !
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் விதமாக கழிவுநீர் மூலமாக தோட்டம் உருவாக்குவது மற்றும் நிலத்தடி நீரை உயரச் செய்வது உள்ளிட்ட வழிமுறைகளுடன் கூடிய `நீர் எழில் பள்ளி’ எனும் திட்டம் தனியார் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பள்ளிகளில் தினமும் சுமார் 25,000 லிட்டர் கழிவுநீர் பாதுகாப்பாக சுத்திகரிக்கப்பட்டு மறுபயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
முதல்கட்டமாக சென்னை எழும்பூர், அசோக் நகர், போரூர், அம்பத்தூர், வில்லிவாக்கத்தில் உள்ள 5 அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் `நீர் எழில் பள்ளி’ திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று ( 22 – 07 – 2026 ) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பங்களிப்பு: இத்திட்டம் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனத்தின் (TNGCC) ஆதரவுடனும், மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் SIV இம்பேக்ட் நிதியுதவியுடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.













