தமிழகத்தில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் :
கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில், தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளன.
தேசிய மருத்துவ ஆணையம், இரண்டு சுயநிதி கல்லூரிகள் மற்றும் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் தலா 50 இடங்கள் அதிகரிக்க அனுமதி வழங்கியதையடுத்து இந்த இடங்கள் சேர்க்கப்படுகின்றன.
இத்துடன், கடந்த வாரம் மாநிலத்தில் உள்ள மூன்று நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தலா 50 இடங்களை அதிகரிக்க அனுமதி பெற்றன. அகில இந்திய அளவில், 2024-25 கல்வியாண்டில் 1,17,750 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, 2025-26 கல்வியாண்டில் 1,23,700 ஆக அதிகரித்துள்ளது என மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம் அறிவித்துள்ளது.
இரண்டாம் சுற்று கலந்தாய்வு கால அட்டவணை:
மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகள், இஎஸ்ஐசி மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கான தற்காலிக அட்டவணை கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 16 காலை 10 மணிக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது. நீட்-2025 தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 19 முதல் 22 வரை விருப்பத் தேர்வுகள் (Choice filling) மற்றும் அதை இறுதி (locking) செய்யலாம்.
செய்திக்குறிப்பின்படி, இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளான செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை செப்டம்பர் 19-க்குள் புதிய இடங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலியிடங்களின் விவரங்கள் செப்டம்பர் 19 முதல் இணையதளத்தில் வெளியிடப்படும். இட ஒதுக்கீடு செப்டம்பர் 23 அன்று நடைபெறும், முடிவுகள் செப்டம்பர் 24 அன்று வெளியிடப்படும்.
மாணவர்கள் செப்டம்பர் 30 மாலை 5 மணிக்குள் ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் இதே நேரத்தில் நடைபெறும்.

அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு
இதற்கிடையில், மத்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு (எம்சிசி) இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகளை நாளை (செப். 17) வெளியிடும். விருப்பத் தேர்வுகளை இறுதி செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. மாணவர்கள் செப்டம்பர் 25-க்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
மூன்றாம் சுற்று கலந்தாய்வு :
மூன்றாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும், அக்டோபர் 17 அன்று கல்லூரியில் சேர கடைசி நாளாகும்.
மாநில அரசின் மூன்றாம் சுற்று கலந்தாய்வு :
மாநில அரசின் மூன்றாம் சுற்று கலந்தாய்வு அக்டோபர் 6 முதல் 17 வரை நடைபெறும், அக்டோபர் 22 அன்று கல்லூரியில் சேர கடைசி நாளாகும். ஸ்டிரே வேகன்சி (Stray vacancy) சுற்று அக்டோபர் 29 வரை நடைபெறும், மருத்துவக் கல்லூரியில் சேர நவம்பர் 5 கடைசி நாளாக இருக்கும்.
கல்லூரி ஆரம்பம் :
அனைத்து இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகளும் செப்டம்பர் 22 அன்று தொடங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அனைத்துக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.












