12 – ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

12 – ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

12 – ம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இக்கல்வியாண்டே ( 2025 – 2026 ) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது :

ஏழை எளிய மாணவ மாணவர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சரால் ஆணையிட்டப்பட்டு அந்த இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப 15,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டுக்கான மாணாக்கார்கள் சேர்கைக்கான விண்ணப்ப பதிவு 7 – 5 – 2025 ல் தொடங்கி தற்போது முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

+2 பொதுத்தேர்வில் தவறும் மாணவர்கள் தாங்கள் உயர்கல்வி வாய்ப்பை தவறவிட்டோம் என்று சோர்வடைந்து விடாமல் இருக்க அவர்கள் உயர்கல்வி வாய்ப்பினை பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இக் கல்வியாண்டில் உயர் கல்வி பயில ஏதுவாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவினை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிப்பதற்கு உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே மாணவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர்கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.