நீட் – 2026 தேர்வு : ஹால் டிக்கெட் ஏப்ரல் 27 இன்று வெளியிடப்பட்டது :

நீட் – 2026 தேர்வு :
ஹால் டிக்கெட் ஏப்ரல் 27 இன்று வெளியிடப்பட்டது :

நீட் – 2026 தேர்வுக்கான ஹால் டிக்கெட், நிர்வாகக் காரணங்களால் நேற்று வெளியாகவில்லை. மாணவர்கள் இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்டிஏ ( தேசிய தேர்வுகள் முகமை) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ‘நீட்’ தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.

அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இத்தேர்வை நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடைபெறும்.

துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத வகையில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு வழிமுறைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்:

தேர்வர்கள் OMR தாளில் பதில்களைக் குறிக்க, மையத்தில் வழங்கப்படும் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிழைதிருத்தம் செய்வதோ அல்லது திருத்தும் திரவத்தைப் பயன்படுத்துவதோ அனுமதிக்கப்படாது.

மின்னணு சாதனங்கள், கைக்கடிகாரங்கள், கால்குலேட்டர்கள், தாள்கள், கைப்பைகள், உணவுப் பொருட்கள் மற்றும் உலோகப் பொருட்கள் தேர்வு அறைக்குள் தடை செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட ஆடை விதிமுறைகளின்படி, இலேசான ஆடைகள் அனுமதிக்கப்படுகின்றன.

போலி இணையதளங்கள் அல்லது சரிபார்க்கப்படாத இணைப்புகளை நம்புவதற்கு எதிராக NTA தேர்வர்களை எச்சரித்துள்ளதுடன், அனுமதி அட்டை மற்றும் தேர்வுத் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.