தமிழ்நாட்டில் 236 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 2025 – 2026 ம் கல்வியாண்டில் ‘வெற்றி பள்ளிகளாக மாறுகின்றது : அரசு ரூ. 54.73 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 2025-26 ம் கல்வியாண்டில் 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளை VETRI பள்ளிகளாக (vibrant educational targeting Reputed institutions) மாற்றம் செய்து துங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டம் 2021-22-ஆம் ஆண்டுத் தொங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்டத்திற்கு 1 என 38 உண்டு உறைவிட மாவட்ட மாதிரிப் பள்ளிகள் துவங்கி நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் அகில இந்திய முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு JEE, NEET, CLUT, CUET, IPMAT உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் முதலாம் ஆண்டில் 75 மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 274 மாணவர்களும், மூன்றாம் ஆண்டில் 628 மாணவர்களும் என இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் உள்ள முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
2024-25்ம் ஆண்டில் 901 மாணவர்கள் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 4 ஆண்டு காலத்தில் மாதிரிப் பள்ளிகள் மூலமாக பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், மாவட்ட உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை வட்டார அளவில் கொண்டு செல்வதற்காக ‘வெற்றி பள்ளிகள் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
”தமிழ்நாட்டில் உள்ள 414 வட்டாரங்களில் 500 வெற்றி பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒரு அரசு மேல்நிலைப் பள்ளித் தேர்ந்தெடுக்கப்பட்டு, அது வெற்றி பள்ளியாக தரம் உயர்த்தப்படும். அந்தப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகள் உருவாக்கப்படும்.
அப்பள்ளியில் வாரந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறும். முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான JEE, NEET, CLUT, CUET, IPMAT உள்ளிட்ட நுழைவுத் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக பயிற்சித் தாள்கள், வீடியோ மூலம் பாடங்கள் மற்றும் ஆசிரியர்களின் நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலம் கற்பிக்கப்பட உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பையும் தரமான உள்ளீடுகளையும் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கித் தரும்.
அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12 ம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் இணைந்து பயன் பெறலாம். இந்த வட்டார அளவிலான வெற்றிப் பள்ளிகள் மூலமாக ஏறத்தாழ 50,000 மாணவர்கள் பயன்பெறுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்காக அரசு ரூ. 111 கோடியே 37 லட்சம் ஒதுக்கியுள்ளது. அதில், முதற்கட்டமாக இந்த ஆண்டு 236 வட்டாரங்களில் வெற்றிப் பள்ளிகள் தொடங்குவதற்கென ரூ. 54 கோடியே 73 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கல்வி ஆண்டில் எஞ்சிய 178 வட்டாரங்களையும் சேர்த்து, மொத்தம் 500 வெற்றிப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன” இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












