சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1.85 கோடி ரூபாய் செலவில் புத்தகப் பூங்கா :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் 1.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
இந்தப் புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி பாடநூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியவை கிடைக்கும்.
நூலக கட்டிடம் & இணையதளம் :
அதே போல, பொது நூலக இயக்ககம் சார்பில் 29.80 கோடி ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழு நேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களையும் முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் உருவாக்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டு, தமிழ்நாடு பாடநூல் கழக நூல்கள் விற்பனைக்கான மின் வணிக இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
மேலும் பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு மாநிலங்களுக்கு சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், 821 பொது நூலகங்களுக்கு கூடுதல் கட்டடம் கட்டுதல், தேவையான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், கணினி தொடர்புடைய சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு சிறப்பு நிதியுதவியாக 213 கோடியே 46 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது என அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.












