பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சார்ந்து பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் :
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது !
பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், நம் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்வதற்காகவும், அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்காகவும் பள்ளி மேலாண்மை குழு 26.9.2026 அன்று மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது.
இதன் பொருட்டு பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தா குளத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகன் தலைமையில்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளித் தலைமை ஆசிரியை எமல்டா கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசி, 26.9.26 அன்று நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பற்றியும் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முறை பற்றியும் எடுத்துரைத்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் பள்ளி மேலாண்மை குழுவின் சிறப்புகளையும் பணிகளையும் விளக்கிக் கூறினார். மேலும்
கடந்த பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 2 ஆண்டு கால சாதனைகள் குறித்தும் , பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். பணி நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.












