நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) ஐக்கிய அரபு அமீரகப் பிரதிநிதிகளுக்கான நிர்வாக வணிக மேலாண்மைத் திட்டம் நிகழ்ச்சி!

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) ஐக்கிய அரபு அமீரகப் பிரதிநிதிகளுக்கான நிர்வாக வணிக மேலாண்மைத் திட்டம் நிகழ்ச்சி!

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), தாளூரில், ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) சேர்ந்த 14 பிரதிநிதிகளுக்கான நிர்வாக வணிக மேலாண்மைத் திட்டம் (Executive Business Management Program – EBMP) ஆகஸ்ட் 4 முதல் 6 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

இத்திட்டத்தின் முதல் நாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற்ற வளாகக் கற்றல் நிகழ்வில் (Campus Immersion Program), கல்லூரியின் மேலாண்மை இயக்குநரும் செயலாளருமான டாக்டர். ரஷித் கஸ்ஸாலி தொழில்முனைவு வழிகாட்டல் (Business Mentoring) தொடர்பாக சிறப்புரையாற்றினார்.

தொழில்முனைவோருக்குத் தேவையான தலைமைத்துவம், நிர்வாகத் திறன் மற்றும் வணிக மேம்பாட்டு உத்திகள் குறித்து அவர் விளக்கமளித்தார். கல்லூரியின் முதல்வர் பால ஷண்முக தேவி வரவேற்பு நல்கினார்.

இரண்டாம் நாளான ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஆஷிக் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை பயிற்றுநர் (IMG Kerala) மற்றும் அகில இந்திய மேலாண்மைச் சங்கத்தின் (AIMA), புது தில்லியின் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை ஆசிரியர், மேலாண்மைத் திறன் மேம்பாடு குறித்த சிறப்புப் பயிற்சி வழங்கினார். தொடர்ந்து, பத்தேரி- விநாயகா மருத்துவமனையின் பொது மருத்துவத் துறை மருத்துவரான டாக்டர் ஜிதேந்திரநாத் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும், தொழில்சார் நலனும் தொடர்பாக உரையாற்றி, பிரதிநிதிகளுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நிறைவு நாளான ஆகஸ்ட் 6-ஆம் தேதி, கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சாஜி கோபிநாத் டிஜிட்டல் மாற்றம், புதுமை மற்றும் எதிர்கால மேலாண்மை குறித்த சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

தொடர்ந்து, EBMP பிரதிநிதிகள் கல்லூரியின் பல்வேறு துறைகளில் மாணவர்களுடன் நடைபெற்ற குழுக் கலந்துரையாடல்களில் (Panel Discussions) பங்கேற்று, தொழில்முனைவு, மேலாண்மை, தலைமைத்துவம் மற்றும் உலகளாவிய வணிக அனுபவங்கள் தொடர்பான தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிர்வாக வணிக மேலாண்மைத் திட்டம், சர்வதேச கல்வி மற்றும் தொழில்துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பயனுள்ள தளமாக அமைந்ததுடன், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் ஐக்கிய அரபு அமீரகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் தொழில்முறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.