75 வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் தினமலர் மற்றும் ஏரல் கே. சின்னத்துரை அன் கோ இணைந்து நடத்திய மெகா கோலப்போட்டி :
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்றது.
அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்
கோலம் தமிழகத்தின் பூர்வீகக் கலை.இது 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கலை வரலாற்றைக் கொண்டிருக்கலாம்.
தமிழகத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பிற தென்னிந்திய மாநிலங்களுக்கும், இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.
அரிசி மாவு கொண்டு வாசலில் வரையப்படுகிறது; இது கணிதம், வடிவியல், ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடையது.
கோலம் தினமும் வரையப்பட்டு அழிக்கப்படுவதன் மூலம் வாழக்கையின் நிலையாமையை உணர்த்துகிறது, மேலும் இது தெய்வங்களை வரவேற்பதற்கும், எதிர்மறை சக்திகளைத் தடுப்பதற்கும் உதவுகிறது.
தமிழில் முன்னணி நாளிதழான தினமலர் ஆரம்பித்து 75 வது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் தினமலர் மற்றும் ஏரல் கே.சினத்துரை அன் கோ நடத்திய கோலப்போட்டி 75வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் வ. உ. சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.
நமது நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கோலங்கள் கோவில்கள்,விசேஷ நிகழ்ச்சிகளான திருமணம், திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் விதவிதமாக வண்ண மயமாக வரையப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் மார்கழி மாதத்தில் கோலம் இடுதல் ஒவ்வொரு வீட்டின்ஷமுன் வாசலில் அதிகாலையில் 4 மணிக்கு விதவிதமாக வரைந்து பெண்கள் நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடியில் தினமலர் நாளிதழ் மற்றும் ஏரல் கே.சின்னத்துரை அன் கோ இணைந்து நடத்திய கோலப்போட்டி தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் கடந்த ஞாயிறு ( ஜனவரி 4 ) அன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம்,ஏரல் மற்றும் தூத்துக்குடி போன்ற ஊர்களில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட தினமலர் வாசகிகள் ஆர்வத்துடன் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து போட்டியில் கலந்து கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு கோல போட்டியை தினமலர் தினேஷ் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி ஜே. சி. ஐ., தலைவி குணசுந்தரி, மண்டல பயிற்சியாளரும் ஆசிரியருமான இனிக்கோ ஆகியோர் நடுவர்களாக இருந்து கோலப் போட்டியின் சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர்.
போட்டியில் சிறந்த கோலங்களை வரைந்ததற்காக தூத்துக்குடி ஸ்பிக் நகர் கௌரி முதல் பரிசையும், ஸ்ரீவைகுண்டம் பேச்சியம்மாள் இரண்டாம் பரிசையும் தூத்துக்குடி பவானி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
முதல் பரிசு பெற்றவருக்கு ரூபாய் 3,000 மதிப்புள்ள பட்டுச் சேலையும், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூபாய் 2,500 மதிப்புள்ள பட்டுச்சேலையும், மூன்றாம் பரிசு பெற்றவருக்கு ரூபாய் 2,000 மதிப்புள்ள சேலையும் வழங்கப்பட்டன.
மேலும் போட்டியில் கலந்து கொண்டு அனைவருக்கும் ரூபாய் 1,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு தினமலர் தினேஷ் தலைமை வகித்தார்.ஏரல் கே.சின்னத்துரை அன் கோ உரிமையாளர் அரி ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார், உதவி ஆசிரியர் வடிவேலு வரவேற்றுப் பேசினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வ.உ சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு கலந்து கொண்டார்.
பரிசுகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
விழாவின் இறுதியில் தூத்துக்குடி தினமலர் மூத்த நிருபர் அன்பழகன் நன்றி கூறினார்.












