அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும் : அமைச்சர் கோவி. செழியன் தகவல்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும் :
அமைச்சர் கோவி. செழியன் தகவல் :

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்கள், நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என்று அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது :

மருத்துவமும் உயர்கல்வியும் தனது இரு கண்களாக கொண்டு ஒவ்வொரு நாளும் அதன் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.உயர்கல்வியில் நமது மாணவர்கள் என்றென்றும் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்பதற்காகவும் தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகளுக்கு இடையே உள்ள போட்டியிலே வென்றெடுக்க நமது மாணவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் வேலை தேடுபவராக இல்லாமல் தொழில் முனைவராக திகழ வேண்டும் என்பதற்காக மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வராக திகழ வேண்டும் என்ற ஒரே நோக்கில் நான் முதல்வன் என்ற முத்தான திட்டத்தை வழங்கி அனைத்து மாணவர்களும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

உயர் கல்வி பெற பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் சுயமரியாதையுடன் உயர்கல்வி பயிலவும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் மாதம் 1000 வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வழங்கியதுடன் இதில் இந்த ஆண்டு கல்வியாண்டு மட்டும் 16 புதிய கல்லூரிகளை அறிவித்து தொடங்கியதுடன் 15,000 மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒப்புதல் அளித்து சேர்க்கப்பட்டுள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் அந்தந்த பகுதியில் உள்ள தொழில் முறைக்கு ஏற்ற பல்வேறு புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி கற்கும் திறன் எவ்வகையிலும் பாதிப்படைய கூடாது என்ற எண்ணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேற்படி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.