தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் விளக்கம்
தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால் 208 அரசுப் பள்ளிகள் மூடல்: பள்ளிக்கல்வித் துறை விளக்கம்
தமிழகத்தில், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால், 208 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன’ என, பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் அளித்துள்ள விளக்கம்:
தமிழகத்தில், 58,924 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.21 கோடி மாணவர்கள், 5 லட்சத்து, 34,799 ஆசிரியர்கள் உள்ளனர். இவற்றில், 208 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 114 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 சுயநிதி பள்ளிகள், இரு மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என, மொத்தம், 1,204 பள்ளிகளில், சேர்க்கை நடபெறவில்லை.

சுயநிதி பள்ளிகளில், 72 சதவீதம், மற்ற பள்ளிகளில், 28 சதவீதம் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இதற்கு, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதே முக்கிய காரணம். அரசு, தனியார் பள்ளி என்ற பாகுபாடு காரணமல்ல.
அதாவது, 2011ல், 1 வயதுக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை, 10.74 லட்சமாக இருந்த நிலையில், 2016ல், 10.45 லட்சமாகவும், 2021ல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது.
மேலும் இதுஅடுத்த ஆண்டில், 8.78 லட்சமாக குறையும் என, 2020ல் வெளியிடப் பட்ட மத்திய மக்கள் தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள், தொலைதுார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், பள்ளிகளில் சேரும் வயதில் குழந்தைகள் இல்லாத காரணத்தாலும், சில பள்ளியில் படித்த மாணவ, மாணவியரின் பெற்றோர் இடம் பெயர்ந்துள்ளதும் காரணமாகும்.
பெற்றோர் தங்களின் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி சேர்த்து, ஆங்கில வழிக்கல்வி பெறுவதை பெருமையாக கருதுவதாலும், பெற்றோர் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வதாலும், கிராமப்புற பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது.
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்டமைப்புகளை மேம்படுத்தியும், மாணவர் சேர்க்கையை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.












