பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக் கூடாது :
பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
தேசியக்கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி ( நாளை மறுதினம் ) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக் கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.
இது தவிர ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரையும் அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் தேசியக் கொடியை தலைகளாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.
இது சார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












