தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் போதையில்லாத தூத்துக்குடியை உருவாக்க கல்லூரி மாணவிகள் உறுதி மொழி ஏற்பு!
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டும், தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பிற்கு இணங்கவும், 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 முதல் 18 வரை போதைப்பொருள் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்புப் பிரிவு தேசிய சேவைத் திட்டம் மற்றும் எம்பவர் இந்தியா ஆகியவை இணைந்து ஆரோக்கியமாக வாழ்வோம் போதைப்பொருளைத் தவிர்ப்போம் (Live Healthy: Say No to Drugs) என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் சங்கர் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தனிநபர் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான பொது நிலைப்பாடு குறித்து கருத்துரையாற்றினார்.

போதையில்லாத தூத்துக்குடியை உருவாக்க கல்லூரி மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர். சட்டவிரோதப் போதைப்பொருட்களின் விற்பனை, விநியோகம் மற்றும் பயன்பாட்டைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கொள்கைகள், கல்வி, விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளின் முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி வலியுறுத்தியது. விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் ஆகியவற்றின் மூலம் பொது சுகாதார அபாயங்களையும் சமூகத் தீங்குகளையும் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்ச்சி கலந்துரையாடல் வடிவில் அமைந்திருந்தது. போதைப்பொருளைத் தவிர்ப்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பது குறித்த தங்கள் சந்தேகங்களை பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தூய மரியன்னை கல்லூரி செயலாளர் முனைவர் குழந்தை தெரேஸ், முதல்வர் முனைவர் ஷிபானா, துணை முதல்வர் முனைவர் எழிலரசி, சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குநர் முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ், அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் விமலா என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் அமல ஸ்டெஃபி, முனைவர் சுபாவதி, முனைவர் பிரியங்கா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.












