கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி :
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண்: 132, தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட மகளிர் அதிகாரம்மையம் ஆகியவை இணைந்து 15.07.2026 அன்று” பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர். மதிவண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, இணைய வழி குற்றத் தடுப்பு, சமூகஊடகங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் காவல்துறை அவசர உதவி எண் 1091 குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வழக்கறிஞர் சோலையப்பன் பெண்களின் சட்ட உரிமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் இலவச சட்ட உதவிகளைப் பெறும் வழி முறைகள் குறித்து விளக்கமளித்தார்.

மாவட்ட மகளிர் அதிகாரமையத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா குழந்தைத் திருமணத் தடுப்பு, பாலின சமத்துவம், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தடுப்பு, சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் அரசின் மகளிர் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி பொண்ணுமாரி மகளிர் உதவி எண் 181 மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், அனைத்து மாணவிகளும் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதி மொழி மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஆகிய வற்றை ஏற்றுக் கொண்டனர் .
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்” என்ற தலைப்பில் சுவரொட்டி மற்றும் மௌன நாடகம் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று சமூக விழிப்புணர்வு கருத்துகளை படைப்பாற்றலுடன் வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி, பாலின நிபுணர் முருகப்பெருமாள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி மகளிர் மேம்பாட்டுப் பிரிவு, நாட்டு நலப்பணித் திட்ட அணி எண்: 132, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.












