தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!
தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி முதல்வர் முனைவர்.இளங்குமரன் ஒப்புதலுடனும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) தலைவருமான விஷு மகாஜன், இ.ஆ.ப. நடவடிக்கையின் படியும், 16.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பேரிடர் மேலாண்மை குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மேற்கொண்ட அறிமுகப் பயிற்சி (Familiarization Exercise) நிகழ்வின் ஒரு பகுதியாக, ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களிடையே பேரிடர் முன்னெச்சரிக்கை, அவசரகால நடவடிக்கைகள் மற்றும் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
அரக்கோணத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுத் தலைவர் சுரேஷ் சந்த் குமாவத் தலைமையில் விழிப்புணர்வு வகுப்பும், செயல்விளக்கப் பயிற்சிகளும் நடைபெற்றன. அவருடன் ஹவில்தார்கள் ரஞ்சித், சக்தி,பொன் செல்வம் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, பேரிடர் மேலாண்மை தொடர்பான பல்வேறு நுட்பங்களை விளக்கி, மீட்புப் பணிகள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் குறித்து நேரடி செயல்விளக்கங்களை வழங்கினர்.

மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பேரிடர் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பான வெளியேற்ற முறைகள், முதலுதவி மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான நடைமுறை அறிவைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சி ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், வருவாய் ஆய்வாளர் பொன். முருகேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜெஸ்ஸிபாய் ஹில்டா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரி ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் அனைத்து மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நேரடி செயல்விளக்கங்களும், கலந்துரையாடல்களும் மாணவர்களிடம் பேரிடர் காலங்களில் துரிதமாகவும் திறம்படவும் செயல்படும் விழிப்புணர்வையும், தயார்நிலையையும் மேம்படுத்தின.

இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சி, பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் சமூக அளவிலான பேரிடர் முன்னெச்சரிக்கையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.













