தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழா
உலக பூமி தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரியின் உயிரறிவியல் துறை மற்றும் சுற்றுச்சூழல் கழகம் இணைந்து “பூமிக்கான குரல்: சுற்றுச்சூழல் விழா” என்ற தலைப்பில் கல்லூரியின் துறைகளுக்கிடையேயான போட்டிகள் 30.04.2026 முதல் தொடங்கி 07.05.2026 வரை 8 நாட்கள் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களிடையே விழிப்புணர்வாக மட்டுமல்லாமல் செயல்முறைப் பொறுப்புணர்வாக மாற்றுவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா இறை வணக்கத்துடன் 07.5.26 அன்று தொடங்கியது. உயிரறிவியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர்.அல்லிமுத்து அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் முனைவர கனகராஜ் தலைமை உரையாற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும், மாணவ ஆசிரியர்களின் சமூகப் பொறுப்பையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் வனங்களையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஆசிரிய-மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

பூமி தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. “பூமியை காப்போம்: எதிர்காலத்தை காப்போம்” என்ற தலைப்பிலான கவிதைப்போட்டி, “நல்ல உலகம் உன்னிடமிருந்து தொடங்குகிறது” என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டி, “இயற்கை ஒரு இடம் அல்ல: அது நம் வீடு” என்ற தலைப்பிலான ஓவியப்போட்டி, “நிறங்களில் காலநிலை” என்ற தலைப்பிலான முக ஓவியப்போட்டி, “இயற்கையின் நிறங்கள்” என்ற தலைப்பிலான புகைப்படப்போட்டி, “எதிர்கால குழந்தைகள் பச்சை என்றால் என்ன? என்று கேட்பது” என்ற தலைப்பிலான மீம் உருவாக்கப்போட்டி, “பூமி என் நண்பன்” என்ற தலைப்பிலான ஆவணப்படப்போட்டி, “இயற்கையின் அழுகை” என்ற தலைப்பிலான பாட்டுப்போட்டி மற்றும் “விலங்குகள் விரைவுப் பார்வை: அழிவுநிலை உயிரினங்கள்” என்ற தலைப்பிலான விலங்குகள் வடிமைப்பு போன்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளுக்கான நடுவர்களாக பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள் பணியாற்றி, திறமையான மதிப்பீட்டை வழங்கினர். மாணவர்களின் படைப்பாற்றல், சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனை மற்றும் சமூக அக்கறை ஆகியவை போட்டிகளில் சிறப்பாக வெளிப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பொருள் அறிவியல் துறையும் இரண்டாம் இடத்தை ஆங்கில துறையும் பெற்றன. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் உருவாக்கிய “சுற்றுச்சூழல் ஆல்பம்” மற்றும் “Bio-Calender ”யை சிறப்பு விருந்தினர் அவெளியிட்டார்கள். மேலும், மாணவர் ஹரி நாராயணன் தயாரித்த உலக பூமி தின சிறப்பு காணொளியும் திரையிடப்பட்டது. மாணவர்கள் இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கும் குழு மற்றும் தனிப்பாடல் மைம் நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் “பூமிக்கான குரல்” என்ற கருத்தை உயிர்ப்பித்தனர். சிறப்பு விருந்தினர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசுக் கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மாணவர்கள் தங்கள் அனுபவங்களையும் சுற்றுச்சூழல் குறித்த எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி அறிக்கையை உயிரியல் கல்வியியல் துறையைச் சேர்ந்த செல்வி. பிரியங்கா வாசித்தார். இறுதியாக உயிரியல் துறையின் உதவி பேராசிரியர் ரூபினா தனா தராதனாசுதா நன்றியுரை வழங்கினார்.

முன்னதாக சிறப்பு விருந்தனர் கல்லூரி வளாகத்தில் இரண்டு மரக்கன்றுகள் நட்டார். இந்நிகழ்ச்சியை உயிரறிவியல் துறையைச் சேர்ந்த மாணவிகள் செல்வி மகாலட்சனன மற்றும் செல்வி மதுஸ்ரீ சுபா ஆகியோர்ஜதொகுத்து வழங்கினர். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.













