தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வு மையம் ஆண்டுத்தோறும் தமிழ் இலக்கிய மன்றத்தினை நடத்தி வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும், தமிழ் இலக்கிய மன்றத்தின் தொடக்க விழாவானது 01.08.2025 அன்று தொடங்கப்பட்டு, தமிழ் இலக்கிய மன்றத்தின் நிறைவு விழாவானது, இன்று (03.03.2026) காலை 11.00 மணி அளவில் கல்லூரியின் வசந்திதேவி அரங்கத்தில் இறைவாழ்த்தோடும், தமிழ்த்தாய் வாழ்த்தோடும் அரங்கேறியது.
விழாவின் தொடக்கமாக, முனைவர்.மல்லிகா இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் வரவேற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினர் .மதுரை, செந்தமிழ்க்கல்லூரி, உதவிப்பேராசிரியர், முனைவர்.செந்தில்குமார். “என்றும் நிலைத்திருக்கும் இலக்கியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில், இலக்கியம் என்பது மனித சிந்தனையில், அனுபவத்தில் முகிழ்வது. தனி மனித நடத்தை, சமூக மேம்பாட்டை பேசுவது நல்ல இலக்கியம் என்றும், உள்ள தூய்மையைக் கெடுப்பது நச்சு இலக்கியம் என்றும் கருத்துரைத்தார். மேலும், “என்றும் நிலைத்திருக்கும் இலக்கியங்களாகச்” சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரையிலும் அதன் சிறப்பியல்புகளையும் புலவர்களின் பெருமைகளையும், பாரி, பேகன் முதலான குறுநிலமன்னர்கள் பற்றியும், திருக்குறள் ஓலைச்சுவடிக் கிடைத்த விதம் குறித்தும் எடுத்துரைத்தார்.
விழாவின் நிறைவாக, முனைவர்.சிவகாமிசுந்தரி, இணைப்பேராசிரியர் நன்றி நவில விழா நிறைவுப் பெற்றது.
இந்நிகழ்வானது, மாணவிகளுக்குத் தமிழ் இலக்கியத்தின் நிலைத்த தன்மை மற்றும் பழம்புலவர்களின் அறிவுத்திறன், மாண்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக அமைந்தது. இதனைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் நடத்தினர்.












