கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்கலை மன்றம் சார்பில் போட்டிகள் நடைபெற்றது
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை ( Fine Arts ) மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ராஜேஸ்வரன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், மாணவர்கள் எந்த செயலையும் ஆர்வத்துடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றியை அடைய முடியும் என கூறினார். மேலும், கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மாணவர்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தி வளர்க்கும் என்றும், அவை தன்னம்பிக்கை, ஒழுக்கம், தலைமைத் திறன் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கை உருவாக்கும் என்றும் விளக்கினார். கல்வியுடன் சேர்ந்து கலைத் திறன்களும் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை வலியுறுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கான குழு நடனம், டூயல் பாடல், மீம் உருவாக்கம், குறும்படம், புகைப்படம், பாரம்பரிய நடனம் மற்றும் திரைப்பட காட்சி மறுஉருவாக்கம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வழிகாட்டுதலின் படி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நுண்கலை மன்ற பேராசிரியர்கள் செய்திருந்தனர்.












