தூத்துக்குடி மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இஆப தெரிவித்துள்ளதாவது :

தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 14.10.2025 அன்றும்

கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 15.10.2025 அன்றும்

காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும்

கல்லூரி மாணவர்களுக்கு திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரையும், கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரையும் அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து போட்டி நடைபெறும் நாளன்று காலை 9 மணிக்கு வருகை தந்து வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000-மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 7000-மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 5000-மும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

போட்டிகளில் முதல் பரிசினை பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.

மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் சுந்தர் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்..