தூத்துக்குடி தூய பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
( சயின்ஸ் எக்ஸ்போ – 25 )
தூத்துகுடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சியானது ‘சயின்ஸ் எக்ஸ்போ-25’ எனும் பெயரில் புதன்கிழமை ( நவம்பர் – 5 ) நடைபெற்றது.
கண்காட்சியை தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் வாழ்த்துரை நல்க, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையுரை நிகழ்த்தினார். அறிவியலின் முக்கியத்துவத்தையும், NMMS போட்டித் தேர்வுகள் மற்றும் இன்ஸ்பையர் அறிவியல் போட்டிகளில் மாணவர்கள் அதிகமாக பங்கேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மையப்படுத்து பேசி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
திரளான எண்ணிக்கையில் தங்கள் படைப்புகளுடன் கண்காட்சியில் பங்கெடுத்த மாணவர்கள், அறிவியல் படைப்புகளோடு தாங்கள் படிக்கும் எல்லா துறைகளில் இருந்தும் தாங்கள் படித்தவற்றை கொண்டு உருவாக்கிய படைப்புகளையும் காட்சிப்படுத்தினார்கள். கண்காட்சியை பிற பள்ளிகளின் மாணவ மாணவியர் வந்து ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

குப்பைத் தொட்டிகள் நிறைந்துவிட்டதை அறிவிக்கும் தானியங்கி அமைப்பு, மின் அனுப்பீட்டுக் கம்பிகளில் பிரச்சனை ஏற்படுகிற போது தானாகவே மின்சாரத்தைத் துண்டிக்கும் அமைப்பு, மீன் தொட்டி கழிவுகளை செடிகளுக்கு உரமாக்கி தூயநீராக்கி மறுசுழற்சி செய்கிற அமைப்பு, பழங்களின் தரப்பரிசோதனை செய்கிற அமைப்பு, பறவைகளுக்கான தானியங்கி நீர் வழங்கி மற்றும் மனிதர்கள் இருப்பதை உணர்ந்து கொள்ளும் தானியங்கி மின்விசிறி அமைப்பு போன்ற படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

மேலும் தமிழ் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் செயல்முறை கற்றல் வழியாக தாங்களே உருவாக்கி இருந்தனர். அப்படைப்புகளை பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் நயமுற காட்சிப்படுத்தினர். பள்ளியின் அதிபர் தந்தை மரிய சிங்கராயர் அடிகளார் இந்த ஒரு நாள் அறிவியல் கண்காட்சிக்கு முன்னிலை வகித்தார்.
பள்ளியின் தலைமையாசிரியர் அமல்ராஜ் அடிகளார் அறிவியல் ஆசிரியர்களை தனது தலைமையின் கீழ் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தியது கண்காட்சி சிறப்பாக நடைபெற காரணமாக அமைந்தது.












