தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இஸ்ரோ தலைவர் நாராயணன் பங்கேற்பு

தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் :
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இஸ்ரோ தலைவர் நாராயணன் பங்கேற்பு

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தை மாற்றுவது தொடர்பான உயர்மட்ட நிபுணர் குழு மற்றும் பாடத்திட்ட வரைவுக் குழு ஆகியவற்றின் முதல் கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், இஸ்ரோ தலைவர் நாராயணன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

மாநிலக் கல்விக் கொள்கை (SEP) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்த ஆண்டு பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த மாற்றங்கள் 2027-28 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு நிபுணர் குழு மற்றும் ஒரு பாடத்திட்ட வடிவமைப்பு குழு என இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.

நிபுணர் குழுவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகிக்கிறார். பாடத்திட்ட வடிவமைப்பு குழுவுக்கு மாநிலத் திட்டக் குழுவின் (SPC) உறுப்பினர் மற்றும் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமை தாங்குகிறார்.

இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், “இந்த முழுமையான பாடத்திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். மேலும், கலை, விளையாட்டு, பண்பாடு, வரலாறு, மென்திறன்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். குறிப்பாக, மாநிலத்தின் வேர்களைக் கொண்ட கதைகளுடன் இவை கற்பிக்கப்படும். இது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சரியான முயற்சி,” என்று தெரிவித்தார்.

மேலும், புதிய பாடத்திட்டத்தில் அறிவுசார் கல்வி (intellectual-based education) மற்றும் மதிப்பு அடிப்படையிலான கல்வி (value-based education) என இரண்டு வகையான கல்வி முறை தேவை புதிய பாடத்திட்டம் இந்த இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும்,” என்றும் நாராயணன் குறிப்பிட்டார்