அரசு ஐடிஐ மாணவர்களுக்கு உலகத் தரத்தில் தொழிற்பயிற்சி :
ரூ.60,000 கோடியில் புதிய திட்டம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
மேம்படுத்தப்பட்ட ஐடிஐக்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் அளிக்கும் திட்டத்தை (பிஎம்-எஸ்இடியு) பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ கல்வி நிறுவன மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் சிறப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில், இளைஞர்களை மையமாக கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குறிப்பாக, ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஐடிஐக்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் அளிக்கும் திட்டத்தை (பிஎம்-எஸ்இடியு) தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்துக்கு உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி வழங்க உள்ளன. இதன்படி, நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ கல்வி நிறுவனங்களில் புதிய தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் சிறப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக பிஹாரில் தொடங்கப்படும் இத்திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 நவோதயா வித்யாலயாக்கள், 200 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் பிரதமர் திறந்து வைத்தார்.
பிஹாரின் புதுப்பிக்கப்பட்ட முதல்வர் சுயஉதவித் தொகை உறுதி திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி பிஹாரில் சுமார் 5 லட்சம் பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது
ஞானம், அறிவு, திறமையின் பிறப்பிடமாக இந்தியா திகழ்கிறது. இதுதான் நமது நாட்டின் பலம். ஐடிஐக்கள் என்பது வெறும் கல்வி நிறுவனங்கள் அல்ல. அவை சுயசார்பு இந்தியாவின் பயிற்சி பட்டறைகள். இளைஞர்களின் திறன் மேம்படும்போது இந்தியா மேலும் வலுவாகிறது.
பிஎம்-எஸ்இடியு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐக்களின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதில் 200 ஐடிஐக்கள் பிரதான மையங்களாகவும், 800 ஐடிஐக்கள் நம்பிக்கை மையங்களாகவும் உருவாக்கப்படும். இந்த திட்டம் மூலம் ஐடிஐ மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். 1,200 தொழில் திறன் ஆய்வகங்கள் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த 2 திட்டங்களும் இந்தியாவை திறன்சார் உற்பத்தி மையமாக மாற்ற அடித்தளமிடும்.
கடந்த 2014-க்கு முன்பு இந்தியாவில் 10,000 ஐடிஐக்கள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 5,000 ஐடிஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
என்று பிரதமர் மோடி பேசினார்.
விளக்கம் :
PM SETU -Pradhan Mantri Skilling and Employability Transformation through Upgraded ITIs
பிரதம மந்திரி மேம்படுத்தப்பட்ட தொழில்பயிற்சி நிலையங்கள் மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாற்றம் என அழைக்கப்படுகிறது.












