இன்று ( 08 – 05 – 2026 ) வெளியாகிறது 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு !

இன்று ( 08 – 05 – 2026 ) வெளியாகிறது 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்:
பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு !

ஏற்கனவே அறிவித்தபடி 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று 08 – 05 – 2026 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ரிசல்ட் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் +2 பொதுத்தேர்வு முடிவுகள், ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விடைத் தாள் திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நீடித்த நிலையில், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சந்திரமோகன் நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இன்று (மே 8, வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும். சென்னை டிபிஐ (DPI) வளாகத்தில் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக, தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல்கள் பரவின. புதிய அரசு அமைந்த பிறகே முடிவுகள் வெளியாகும் என்ற பேச்சுகளுக்கு மத்தியில், தற்போது கல்வித் துறை ஏற்கனவே அறிவித்த தேதியிலேயே முடிவுகளை வெளியிட முன்வந்துள்ளது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தித் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக முடிவுகள் அனுப்பப்படும்.

மேலும் www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
www.dge1.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் பார்க்கலாம்.

வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் தேர்வுகள், இந்த ஆண்டும் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெற்றன.