- அரசுப் பள்ளிகளில் 2026 – 2027 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று ( 02 – 03 – 2026 ) தொடங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை, கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி திறக்கும் நாளில் தான் மாணவர் சேர்க்கை தொடங்குவது வழக்கமாக இருந்தது.
இந்தச் சூழலில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, கடந்த 2024-ம் ஆண்டு முதல், மார்ச் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கப்படுகிறது. இதற்கு பரவலாக பெற்றோரிடம் நல்ல வரவேற்பும் உள்ளது.
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் வரும் 2026-27 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று (மார்ச் 2) தொடங்க உள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமான அளவில் அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப மாணவர் சேர்க்கைக்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும், காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள், உதவித் தொகைகள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்று அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை தரப்பில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.












