பொங்கல் அன்று நடக்கவிருந்த சி.ஏ தேர்வு தேதி மாற்றம்:
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கையைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவிருந்த சிஏ (CA) தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் (ICAI) ஜனவரி மாதம் சிஏ இண்டர்மீடியட் மற்றும் இறுதித் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதில் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இவை தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் ஆகிய தேதிகளில் வந்ததால் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது.
மாணவர்களின் சிரமத்தைப் போக்க, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பட்டயக் கணக்காளர் கழகத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வு நடத்துவது மாணவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். பண்டிகை காலங்களில் பயணங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகள் இருப்பதால் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, அந்தத் தேதிகளில் உள்ள தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த சிஏ இண்டர்மீடியட் தேர்வு மாற்றப்பட்டது.
இந்த தேர்வு ஜனவரி 19 நடைபெறும், மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டையே இதற்கும் பயன்படுத்தலாம். அதேபோல மற்ற தேதிகளில் உள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












