- நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ” விரிவாக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்:
3.06 லட்சம் மாணவர்கள் பயன்
நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” விரிவாக்கத்தை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.
தற்போது 34,987 பள்ளிகளில் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. 2022 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மதுரை ஆதிமூலம் மாநாடு தொடக்கப்பள்ளியில் இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இத்திட்டம் பல்வேறு கட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது,
குழந்தைகளின் கற்றல் திறன் 90 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் முந்தைய பாடங்களை நினைவு கொள்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் பசியோடு பள்ளிக்கு வரும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடினால் மாணவர்கள் பாதிக்கப்படுவது இத்திட்டம் மூலமாக தடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது.

மேலும் 2025 மார்ச் 14ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதியில் அமைந்துள்ள 2430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தில்மூலம் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி 5 வது கட்டமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நகரங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை 8:30 மணிக்கு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.












