பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்கான ‘அகல் விளக்கு’ திட்டம் தொடக்கம்!

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்கான ‘அகல் விளக்கு’ திட்டம் தொடக்கம்!

மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்க ‘அகல் விளக்கு’ திட்டம் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனையடுத்து இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை கீரமங்கலத்தில் அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகள் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகளை குறி வைத்தே அதிகமான குற்றங்கள் நடக்கிறது. இந்த இணைய வழி குற்றவாளிகளிடம் சிக்கி ஏராளமான மாணவிகள் தங்கள் லட்சியம், வாழ்க்கையை இழந்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கல்விக்காக இணைய வழியை தேடும் மாணவிகள் இணைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடம் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இணையத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு “அகல் விளக்கு” என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்த அகல் விளக்கு திட்டம் என்பது மாணவிகள் இணையம் மூலம் ஏற்படும் உடல், மனம், சமூக ரீதியான பிரச்சனை, பாலியல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும், இணைய வழி குற்றங்களில் இருந்தும் தங்களை தற்காத்துக் கொண்டு இணையத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து ஆசிரியைகள், மாணவிகள் உள்ளடக்கி ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழு அமைத்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமே அகல் விளக்கு. இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதன்முதலாக ஒரு அரசுப் பள்ளியில் இருந்தே தொங்கப்பட்டுள்ளது.