ஆசிரியர்களின் நிறைவேற்ற முடியும் என்ற கோரிக்கைகளை பட்டியலிட முதல்வர் ஜோசப் விஜய் கல்வித்துறைக்கு உத்தரவு !
கல்வித்துறையால் நிறைவேற்ற முடியும் அளவில் உள்ள, ஆசிரியர்கள் கோரிக்கைகளை பட்டியலிட்டு அவற்றின் மீது உடன் நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் ‘கிரீன் சிக்னல்’ கொடுத்துள்ளார்.
மேலும் தி.மு.க., ஆட்சியில் நடந்தது போல் இழுத்தடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தி.மு.க., ஆட்சியை தொடர்ந்து த.வெ.க.,விலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்கின்றன.
ஆசிரியர்கள்,ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் என 120க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் இரண்டு நாட்கள் கலந்துரையாடினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் அமைச்சர் முன் வைக்கப்பட்டன.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சங்கங்கள் வாரியாக பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது, சம்பள முரண்பாடு, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம், போராட்டங்களால் சம்பளம் இழந்த ஆசிரியர்களுக்கு நிவாரணம், ஊக்க ஊதியம் பாதிப்பு, ஆசிரியர் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைளை குறிப்பிட்டனர்.
இவற்றில் போராட்டம் காரணமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு 27 நாட்களுக்கான சம்பளம், வழக்குகளை வாபஸ் பெறுவது, ஊக்க ஊதியம் பாதிப்புகளை சரிசெய்வது, ‘டெட்’ தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் நியமிப்பது போன்ற கோரிக்கைகள் உடன் நிறைவேற்ற கூடியவை; இதை அமைச்சரிடம் விளக்கினோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
கலந்துரையாடலுக்கு பின் கல்வி அதிகாரிகளை சந்தித்தோம். அவர்கள், முடியும் என்ற கோரிக்கைகளை உடன் நிறைவேற்ற முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை குறித்து பட்டியலிடப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி போல் தாமதிக்க வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக நம்பிக்கை அளித்தனர் என்றனர்.












