எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் 12ம் தேதி வரை நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் 12ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஆகஸ்டு 12ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 30ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ் படிப்புகளுக்கு 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 25-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 39,853 பேர் இடம்பெற்றுள்ளனர். 7.5% உள் இடஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 4,062 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றுள்ளனர்.போலிச் சான்றிதழ் கொடுத்து கலந்தாய்வில் கலந்து கொண்ட 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 30 ல் நேரடியாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, . 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த கலந்தாய்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. அவர்களுக்கான சேர்க்கை ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, விளையாட்டு வீரர்களுக்கும், பின்னர் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாராருக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு http:tnmedicalselection.net என்ற இணையதளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பதிவு ஆகஸ்ட் 4ந்தேதி வரை வழங்கப்பட்டது. பின்னர் அது ஆகஸ்ட் 6ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்தநிலையில், தற்போது ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரிகளை மாற்றிக்கொள்ள விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் 13ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதிப்பட்டியில் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

கல்லூரிகளில் இடங்களை ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை வரும் 14-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பிற்பகல் 12 மணி வரை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆகஸ்டு 12 மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .