2025-26 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை : சென்னை மற்றும் கோவை கல்லூரிகளுக்கே முக்கியத்துவம் : அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக கல்லூரிகள் சேர்க்கையில் பின்னடைவு

2025-26 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை :
சென்னை மற்றும் கோவை கல்லூரிகளுக்கே முக்கியத்துவம் :
அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக கல்லூரிகள் சேர்க்கையில் பின்னடைவு

2025-26 கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் முதல் சுற்றில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (CSE) மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் (ECE) ஆகிய பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.90 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 2.42 லட்சம் பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ECE பிரிவிற்கான தேவை அதிகரித்திருப்பது முதல் சுற்று கலந்தாய்வு மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

மாநிலத்தின் முதல் 10 கல்லூரிகளில், CSE, ECE, மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (EEE), இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) மற்றும் சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering) போன்ற பொறியியல் பிரிவுகளில் பெரும்பாலான இடங்கள் முதல் சுற்றிலேயே நிரம்பிவிட்டன. தரவரிசைப் பட்டியலில் கீழேயுள்ள கல்லூரிகளிலும் கூட, கணினி அறிவியல் மற்றும் ECE போன்ற சர்க்யூட் தொடர்பான படிப்புகளுக்கு அதிக தேவை இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் கோயம்பத்தூர் நகரங்களில் உள்ள முன்னணி கல்லூரிகளே மாணவர்களின் முதல் விருப்பத் தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) , மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) போன்ற புகழ்பெற்ற உறுப்புக் கல்லூரிகள் மாணவர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், அண்ணா பல்கலைக் கழகத்தின் மற்ற பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கான ஆர்வம் இந்த ஆண்டு சற்று குறைவாக உள்ளது..