தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான நிகழ்ச்சி !
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கலையரங்கில் 2026 ஜூன் 30 அன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வரவேற்புரையாற்றினார்.
தூத்துக்குடி சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் தேவேந்திர வி. நாக்வெங்கர் (IRS) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலால் ஏற்படும் உலகளாவிய மற்றும் உள்ளூர் சவால்கள் குறித்துப் பேசினார். மேலும் போதைப்பொருள் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள், சமூக விழிப்புணர்வு மற்றும் குடும்பத்தின் ஆதரவு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தினார்.
கொச்சி மத்திய ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையரகத்தின் இணை ஆணையர் முனைவர்.வெங்கடேஷ் பாபு (IRS) சிறப்புரையாற்றினார். போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள், மாணவர் ஆலோசனை மற்றும் இளைஞர்களிடையே மன உறுதியை வளர்ப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கு ஆகியவை குறித்து முனைவர்.வெங்கடேஷ் பாபு (IRS) வலியுறுத்திக் கூறினார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய வ.உ.சிதம்பரம் கல்லூரி இளைஞர் நல ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஜாக்சன், சிறப்புரையாளரை அறிமுகப்படுத்தியதோடு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் தூத்துக்குடி சுங்கத் துறையின் இணை ஆணையர்கள் விநாயக் மற்றும் அரவிந்த், தூத்துக்குடி சுங்கத் துறையின் அலுவலர்கள் சுந்தர்ராஜன் மற்றும் சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி இளம் செஞ்சிலுவைச் சங்க (YRC) ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஸ்டீபன் பிச்சைமணி நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான வளாகம் மற்றும் சமூக அளவிலான முயற்சிகளை வலுப்படுத்துதல் ஆகியவையே இந்நிகழ்ச்சியின் நோக்கங்கள் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.












