தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இளநிலை செயற்கை நுண்ணறிவு ( B. Sc., Computer Science With AI & ML )பாடப்பிரிவு புதிதாக தொடக்கம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில்
இளநிலை செயற்கை நுண்ணறிவு ( B. Sc., Computer Science With AI & ML )பாடப்பிரிவு புதிதாக தொடக்கம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக இளநிலை செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி இந்த ஆண்டு 75-வது ஆண்டின் பவள விழாவை கொண்டாடி வருகிறது.

இதனை முன்னிட்டு இந்த கல்வி ஆண்டில் (2025- 2026) இளநிலை கணினி அறிவியலுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர அறிவு இணைந்த B.Sc. Computer Science with AI & ML என்ற புதிய இளநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படுகிறது.
இதற்கான ஒப்புதலை திருநெல்வேலி மன்னோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் பல்வேறு படிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
மேலும், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டு மாணவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் ஏராளமான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக B.Sc. Computer Science with AI & ML என்ற புதிய இளநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படுகிறது. மூன்று ஆண்டு காலம் கொண்ட இந்த படிப்பில் மொத்தம் 48 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
சுயநிதி பாடப்பிரிவில் இந்த படிப்பு தொடங்கப்படுவதால் 50 சதவீத இடங்கள் தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படும்.

இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளோம். மேலும், மாணவர்கள் எளிதாக வேலைவாய்ப்பை பெற பயிற்சி அளிப்பதற்காக கேம்ப்டேக் என்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளோம்.

இந்த படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அப்போது கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் கோமதிநாயகம், மூத்த பேராசிரியர் குத்தாலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள 103 கல்லூரிகளில் வ. உ. சிதம்பரம் கல்லூரியில் தான் இப்பாடப்பிரிவு முதலாவது வருவது குறிப்பிடத்தக்கது.