ஆசிரியர்களின் வழிகாட்டுதலே வெற்றிக்கான சிறந்த படிக்கட்டுகள்

தாயின் கருவறைப் போன்றே ஆசிரியரின் வகுப்பறை மிக முக்கியம். ஒரு தாய் தன் குழந்தையை வளர்ப்பதில் பாதி பங்கு ஆசிரியரை சாரும்.

தாய் தன் குழந்தையை மட்டுமே குழந்தையாக நேசிப்பாள். ஆனால் ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தனது குழந்தையாக நேசிப்பார்.

1. காலையில் பள்ளிக்கு செல்லும் போது புத்துணர்வுடன் செல்லுங்கள் இன்று என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே சிந்தனை செய்து செயல்படுத்துங்கள்.
2. தினமும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை புன்னகையுடன் வரவேற்று அவர்களை மலரச் செய்யுங்கள், அதனால் உங்கள் இன்முகம் மலரும்.
3. என்ன பாடம் நடத்துகிறோமோ அந்த பாடத்தில் வரும் கவிதையோ, நாடகமோ, இலக்கியமாயினும் அதனை எளிதாக மாணவனுக்கு புரியும் எண்ணத்தில் பாடத்திற்கேற்றவாறு கவிஞனாகவோ, நடிகனாகவோ, இலக்கியவாதியாகவோ தாங்கள் கற்பனை செய்து பாடம் நடத்தினால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
4. தினமும் பாடத்தை மட்டும் நடத்தாமல் மாணவர்களை உற்சாகப்படுத்த விளையாட்டு, நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, யோகா என்று வாரம் ஒருமுறை அவர்களை உற்சாகப்படுத்தினால் மாணவர்களின் தனித்திறமை வெளிப்பட்டு பாடங்களிலும் அவர்களின் திறன் வெளிப்படும்.
5. நீங்கள் பாடம் நடத்தும் போது வகுப்பில் உள்ள மாணவர்கள் உற்சாகமடைய வேண்டும். அதனால், மாணவர்கள் தினமும் பாடம் நடத்த நீங்கள் எப்போது வருவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.
6. பாடம் நடத்தும் போது மாணவர்களிடம் அதிகமான கேள்விகளை எழுப்புங்கள். மாணவர்களையும் கேள்வி கேட்க அனுமதியுங்கள் அது அவர்களுடைய சிந்தனை திறனையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
7. நூலகத்தை பயன்படுத்த கற்றுத் தாருங்கள், நல்ல நூல்களை வாசிக்க வலியுறுத்துங்கள். நூல்களையும் தாண்டி தொலைநோக்கு பார்வையுடன் உலகத்தைப் பற்றி சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள்.
8. மாணவர்களிடம் உன்னால் முடியும், நீ நினைத்தால் முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை நிச்சயம் வெற்றி பெறுவாய் என்று தாயைப்போல் அன்புடனும், தந்தையைப்போல் கண்டிப்புடனும், ஒரு நண்பனைப்போல் நட்புடனும் அவர்களை உற்சாகப்படுத்தினால் மாணவர்கள் மிகப் பெரிய சாதனைமானாக வருவான், சாதிப்பான், அப்படி சாதித்த மாணவன் எழுத்தறிவித்தவன் இறைவன் என்று உங்களை வணங்குவான்.