கல்விப் பணியில் கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திரு. P.ஜீவன் ஜேக்கப் M.A.,                    செயலாளர்

உப்புக்கும் முத்துக்கும் மட்டுமல்லாமல் வீரத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் பெற்ற நம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்து கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றது தூத்துக்குடியில் பெயர் பெற்ற பெரியசாமி கல்வி அறக்கட்டளை. ஏழை எளியோர்க்கும், வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய அல்லும் பகலும் பாடுபடுகின்ற மக்களின் வறுமை போக்கி, அவர்களின் வாழ்க்கை செழிக்க தன் அரசியல் சமூக மற்றும் கல்வி சார்ந்த பணிகள் மூலம் அயராது பாடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற N.பெரியசாமி பெயரில் அமையப் பெற்றிருக்கிறது இக்கல்வி அறக்கட்டளை.
இந்த அறக்கட்டளையின் மூலமாக செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒன்று குறுக்குச்சாலையில் செயல்பட்டுவரும் கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியின் செயலாளராக, சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக கல்வி வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட, கல்வித்துறைக்காக அர்ப்பணித்துக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த திரு. P.ஜீவன் ஜேக்கப் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். குறுக்குச்சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உயர்கல்வி தாகத்தை புரிந்து கொண்டு 2018ஆம் ஆண்டு மே மாதம் இக்கல்லூரி துவக்கப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாடு அரசில் முறையாக பதியப் பெற்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கிராமப்புற மக்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற இக்கல்லூரி தேவையுற்றோர்க்கு கல்வியை கிடைக்கச் செய்தல் என்ற தாரக மந்திரத்தை கொண்டு செயல்பட்டு வருகிறது. ஓட்டப்பிடாரம் வட்டம் ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அப்பகுதி மக்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்க்கவும், வாழ்வில் செம்மை பெறும் விதமாகவும் கீதா ஜீவன் கல்லூரி தன் கல்விப் பணியை ஆற்றி வருகிறது.
இக்கலைக் கல்லூரியில் தற்பொழுது இளநிலைப் பிரிவு பாடத்தில் ஆங்கில இலக்கியம், வணிக மேலாண்மை, வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் தமிழ்வழி மூலம் வரலாறு என்ற துறைகளும் முதுநிலைப் பிரிவு பாடத்தில் வணிகவியல் துறையும் செயல்பட்டு வருகிறது. விசாலமான வகுப்பறைகள் சுமார் 6000 க்கும் அதிகமான புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம், கணிணி ஆய்வகம் மற்றும் பரந்து விரிந்த விளையாட்டு மைதானம் ஆகியவை இக்கல்லூரியை மேலும் சிறப்பாக்குகிறது.; மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக கல்லூரியை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் கல்லூரி வாகன வசதி மிக குறைந்த கட்டணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கல்வி சார்ந்த மற்றும் விளையாட்டுத் துறைகளில் மாணவர்களை ஊக்கப்படுத்துவது கல்லூரியின் தனிச்சிறப்பாகும். பல்வேறு கல்லூரிகளில் நடைபெறும் கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கு கொண்டு பரிசுகள் மற்றும் விருதுகளை பெற்று கல்லூரிக்கு பெருமை தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள். இக்கல்லூரியின் மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பின் போதே ஆய்வுக் கட்டுரைகளை எழுதி பிற கல்லூரிகளில் அதை மாணவர்களின் முன் வழங்கியும், ஆராய்ச்சி இதழ்களில் வெளியிட்டும் வருகிறார்கள்.
கல்லூரியை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மாணவர்களின் சேவை, கல்லூரியின் நாட்டு நலப்பணி (NSS) மூலம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது இச்சேவைகளின் மூலம் மாணவர்களுக்கிடையே சேவை மனப்பான்மையும், ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றி வேலைகளை எளிய முறையில் முடிக்கும் ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்த முடிகிறது. இது தவிர YRC மற்றும் RRC இயக்கங்களும் நடத்தப்படுகின்றன. மேலும் கல்லூரியில் கல்வி கற்கின்ற ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு மூலம் கிடைக்கிற உதவித் தொகைகள் (புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை) மட்டுமல்லாமல், நலிவடைந்த குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களின் கல்வி தொடர்வதற்காக ஐயா N.பெரியசாமி பெயரில் உதவி மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிறந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.3000/- கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் ரூ.20000/- முதல் ரூ. 30000/- வரை மாத ஊதியத்தில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரியில் பல கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் நலனை பேணும் விதமாக பெண்கள் குறை தீர்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. பகடிவதைகளை அறவே ஒழிக்;கும் விதமாக குழுக்கள் அமைக்கப்பட்டு கல்லூரி பகடிவதை, புகை மற்றும் போதை இல்லா வளாகமாக செயல்பட்டு வருகிறது. கல்லூரி வகுப்பறைகளின் உள்ளேயும் வெளியேயும் மாணவர்களின் செயல்பாடுகள் முழுவதும் CCTV Camera மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள், காவல் அதிகாரிகள், வழக்குரைஞர்கள் மற்றும் மருத்துவர்களின் மூலமாக மாணவ மாணவிகளுக்கு எல்லாவிதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்கப்பட்டு மாணவர்களின் கல்வி மேம்பாடு குறித்து பெற்றோர்களுடன் உரிய கால இடைவெளியில், முறையாக கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் முறையான கல்வி தகுதிகளோடு, அர்ப்பணிப்புத் தன்மையோடு பணியாற்றி வருகிறார்கள். ஆசிரிய பெருமக்களில் பெரும்பாலோர் ஆராய்ச்சி படிப்பை (Ph.D) முடித்தவர்கள் ஆவர். மற்றவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது 335 மாணவர்களோடு செயல்பட்டு வருகிற கீதா ஜீவன் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதே தன் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் மூலமாக கிராமப் புறங்களை சார்ந்த 75 க்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்னும் அளப்பரிய அந்தஸ்தை பெற்று கொடுக்க உள்ளார்கள் என்பது இக்கல்லூரியின் செயல்பாட்டிற்கு ஒரு மணிமகுடம்.

 

 

 

 

 

 

M. இளங்குமரன் M.A., M.Phil., Ph.D,                                                                                                                                                                                                                    முதல்வர்