வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் மாணவ மாணவியருக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் வ.உ.சி கல்வியியல் கல்லூரியும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.சையது முகமது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர். கனகராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர் பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புக் கல்விபற்றி தன்னுடைய கருத்துரையில் பேசினார். கல்வியியல் பயின்ற மாணவர்கள் என்னென்ன போட்டித் தேர்வுகளை எவ்வாறு எளிதாக எழுதலாம் என்பதை உளவியல் அறிஞர் கார்டனின் நுண்ணறிவு கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கினார். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இறுதியாக வரலாற்றுதுறை பேராசிரியர் முனைவர்.இராஜதுரை நன்றி கூறினார். இந்நிகழ்வில் 151 மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.













