கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் – 2026 : 3 நாட்கள் நடைபெற்றது !
கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண்: 132 மற்றும் உடற்கல்வித் துறை இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி, தேசிய விளையாட்டு தினம் – 2026 விழாவை 28.08.2026 முதல் 30.08.2026 வரை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.
“விளையாடும் பாரதம் – வெல்லும் பாரதம்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இவ்விழாவின் மூலம் மாணவர்களிடையே உடல் ஆரோக்கியம், உடற்தகுதி, விளையாட்டு ஆர்வம், ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் குழு உணர்வு ஆகியவற்றை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முதல் நாளில் “29 சவால்” என்ற சிறப்பு உடற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், குதித்தல், பந்து விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இரண்டாம் நாளில் கபடி, கிளித்தட்டு, சிலம்பம், பல்லாங்குழி, தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம், பரமபதம் மற்றும் நொண்டி உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மூன்றாம் நாளில் விளையாட்டு மற்றும் சமூகப் பங்கேற்பு தினம் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நட்பு விளையாட்டுப் போட்டிகள், கூட்டு உடற்பயிற்சி மற்றும் பல்வேறு உடற்தகுதி செயல்பாடுகளில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றிய அவர், மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், உடற்கல்வி இயக்குநர், நாட்டுநலப் பணித்திட்ட தன்னார்வலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்டனர்.













