கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “Chalk to Skyline” – தலைப்பில் முன்னாள் மாணவியின் ஊக்கமளிக்கும் உரை நடைபெற்றது !
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் ஆங்கிலத் துறை இணைந்து “Chalk to Skyline: An Alumna’s Global Teaching Journey” என்ற தலைப்பில் முன்னாள் மாணவியின் ஊக்கமளிக்கும் உரை நிகழ்ச்சி 29.08.2026 இன்று கல்லூரியில் நடைபெற்றது.
கே.ஆர். கல்லூரியின் ஆங்கிலத் துறை முன்னாள் மாணவியான செல்வி Vedhavilashini. தற்போது Dibber Scandinavian Education, Dubai, UAE நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றினார்.
தனது கல்லூரிப் பருவ அனுபவங்களையும், மாணவியாக இருந்து சர்வதேச கல்விச் சூழலில் பணியாற்றி வரும் தனது பயணத்தையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
கல்வி, தன்னம்பிக்கை, திறன் வளர்ப்பு, தொடர் கற்றல், தொழில்முறை முன்னேற்றம் மற்றும் இலக்கை நோக்கிய விடாமுயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும், வெளிநாடுகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், குறிப்பாக ஆசிரியர் பணிக்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். வெளிநாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள், அதற்குத் தேவையான தகுதிகள், திறன்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆங்கில மொழித் திறன், தகவல் தொடர்புத் திறன் மற்றும் கற்பித்தல் திறன்களை வளர்த்துக் கொண்டால், சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியர் பணிவாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சி Hybrid Mode முறையில் நடைபெற்றது. கல்லூரி மினி அரங்கில் மாணவர்கள் நேரடியாகப் பங்கேற்றதுடன், Google Meet வாயிலாகவும் பங்கேற்பு நடைபெற்றது.
முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் ஆங்கிலத் துறை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி, மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு பயனுள்ள வழிகாட்டுதலை வழங்கியதுடன், கல்லூரிக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் இடையிலான உறவையும் மேலும் வலுப்படுத்தியது.












