தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி : வ.உ.சிதம்பரம் கல்லூரி நடத்தியது!
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) பயனாக, 10.07.2026 அன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவிகளுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வ.உ. சிதம்பரம் கல்லூரியின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஷீபா தவமணி சிறப்பு உரையாற்றினார். மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட ஆர்வம், திறன் மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளின் அடிப்படையில் தகுந்த கல்வி மற்றும் தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும், அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், கல்வி உதவித்தொகைகள், போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மாணவிகள் தங்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு, தெளிவான தொழில் இலக்குகளை நிர்ணயித்து, சரியான முடிவுகளை எடுத்து, தன்னம்பிக்கையுடன் தங்களின் உயர்கல்வி மற்றும் தொழில் பயணத்தைத் திட்டமிட இந்நிகழ்ச்சி பெரிதும் ஊக்கமளித்தது.












