தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் “நீங்களும் ஆகலாம் IAS” என்ற கல்வி நிகழ்ச்சியை UPSC/TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 26.4.26 அன்று, ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் அகாடமி இணைந்து கல்லூரி அரங்கில் நடத்தியது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் இருந்து பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்கள் சிவில் சர்வீஸ் பயணத்தில் கற்றல், மறுபயிற்சி மற்றும் தவறான புரிதல்களை நீக்கும் அனுபவத்தை பெற்றனர்.

இந்த நிகழ்வில் கல்லூரிச் செயலர் திரு ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். முதல்வர் டாக்டர். வீரபாகு வழங்கிய பாராட்டுரை, நேர மேலாண்மை மற்றும் சுறுசுறுப்பான முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்களுக்கு ஊக்கமளித்தது.
ஓய்வு பெற்ற IPS அதிகாரி டாக்டர் ரவி, இந்திய காவல் சேவையின் மகத்துவத்தை விளக்கி, தன் அனுபவங்கள் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மூலம் மாணவர்களை ஊக்குவித்தார்.

கிங்மேக்கர்ஸ் அகாடமியின் இயக்குநர் சத்ய ஸ்ரீ பூமிநாதன் சிவில் சர்வீஸ் தேர்வின் முழுமையான விளக்கத்தை வழங்கினார். பின்னர், பயிற்சியாளர் அடில் பெய்க் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் உத்திகளை விரிவாக எடுத்துரைத்தார். கணிதத் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர்.ஜாக்சன் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.

தூத்துக்குடி மாணவர்கள் பலர் உயர்கல்வியை தொடர முடியாமல் இருந்த காரணத்தால், பாளையங்கோட்டைக்கு செல்வதற்கான செலவுகளும், சிரமங்களும் இருந்ததை கருத்தில் கொண்டு, எங்கள் நிறுவனர் செயலாளர் வ. உ. சிதம்பரம் கல்லூரியை நிறுவினார். அதேபோல், இந்த துறையில் எங்கள் தன்னலமற்ற சேவையை புதிய கோணத்தில் தொடர்ந்து கொண்டு, மதுரைக்கு தெற்கான மாவட்டங்களில் உள்ள தேர்வர்களுக்காக விரைவில் மகிழ்ச்சிகரமான செய்திகளை அறிவிக்க உள்ளோம் எனக் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.














