கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய் மொழி தினம் கொண்டாட்டம்:
தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் கரிசல் தமிழ் மாணவர் சங்கத்தில் தாய் மொழியின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் பொருட்டு ‘உலக தாய்மொழி தினம்’ கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரி செயலர் தந்தை அருள் முனைவர்.ராஜதேவன்,கல்வி ஒருங்கிணைப்பாளர் தந்தை அருள் முனைவர். ரோசாரியோ ஆண்டனி,கல்லூரி முதல்வர் முனைவர்.பிரபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாணவி சாருமதி வரவேற்புரை வழங்கினார்.

அருட்தந்தை ராஜதேவன் மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார். அருட்தந்தை செல்வராஜ் “தமிழும் அறமும்” எனும் தலைப்பில் சிறப்பு பொழிவுரையாற்றினார். அதில் மொழியின் சிறப்புகளையும் மற்ற மொழிகளை விட தாய் மொழியினுடைய முக்கியத்துவத்தையும் அம்மொழியின் மூலமாக நம் வாழ்வில் மதிப்புமிக்க அறப்பண்புகளைப் பெற்றுக் கொள்வதை பற்றியும் அருட்தந்தை சிறப்பாகவும் கலை நயத்தோடும் நகைச்சுவை உணர்வோடும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது. தமிழ்ச் சான்றோர்களின் வேடத்தில் நிகழ்த்து கலையினை மாணவ மாணவிகள் நிகழ்த்தினர். திருவள்ளுவராக ராமர், ஔவையாராக ஜான்சி மேரி, மகாகவி சுப்பிரமணிய பாரதியாராக சூர்யா, வ.உ.சிதம்பரம் பிள்ளையாக சதீஷ்குமார், வேலு நாச்சியாராக மகாலட்சுமியும் நிகழ்த்து கலையை நிகழ்த்தினார்கள் மற்றும் இவ்வேடமிடப்பட்ட சான்றோர்களின் சிறப்புகளைப் பற்றி வசந்தா காளீஸ்வரி தொகுத்துக் கூறினார். மாணவிகள் மற்றும் மாணவர்கள் தனித்தனி குழுக்களாக பாடல்களையும் பாடினார்கள்.

தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் கரகமும் ஒயிலாட்டமும் பிளாரன்ஸ் அபிதா, முத்தமிழ் நிதர்சனா, கீர்த்தனா ஆகியோரால் ஆடப்பட்டது. ஆரோக்கியமேரி நன்றியுரை வழங்கினார். ஆக்னஸ் நிதிஷா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். நிகழ்வினை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.தமிழரசி, கரிசல் தமிழ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வராஜ், பேராசிரியர் தெய்வரத்தினா, முனைவர்.மகேஷ் குமார், பேராசிரியர் அனிதா ஆகியோர் தமிழ்த்துறை மாணவர்களின் ஒத்துழைப்போடு ஒருங்கமைத்தனர்.












