கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவம், ஒற்றுமை மற்றும் தை திருநாளாம் தமிழர் பண்பாட்டின் சிறப்பை வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த விழா கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில், கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து மேற்கொண்டனர்.
விழாவையொட்டி கோலப்போட்டி, ஓவியப்போட்டி, பலூன் உடைத்தல், கரும்பு உடைத்தல், எலுமிச்சை (லெமன் ஸ்பூன்) போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி உள்ளிட்ட அறிவாற்றல் போட்டிகளும், உறியடித்தல், செங்கல் தூக்குதல், கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்குதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து நடனம், பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவின் சிறப்பு அம்சமாக கல்லூரி வளாகத்தைச் சுற்றி மாணவ, மாணவிகள் டிராக்டரில் ஊர்வலமாகச் சென்று சமத்துவம் மற்றும் தமிழர் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.
கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்த சமத்துவ பொங்கல் விழா, அனைவரின் பங்கேற்புடன் கோலாகலமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது.













