பள்ளி மாணவர்களை தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றார் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் : வழியனுப்பி வைத்தார் ஆட்சியர் இளம்பகவத் இஆப

பள்ளி மாணவர்களை தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றார் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் :
வழியனுப்பி வைத்தார் ஆட்சியர் இளம்பகவத் இஆப

தூத்துக்குடி அருகே பண்டாரம் பட்டியில் உள்ளது தூத்துக்குடி நாசரேத் திருமண்டல அறக்கட்டளை கழகம் ( தூ.நா.தி.அ.க ) துவக்கப்பள்ளி. இதன் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ்.

இவரிடம் கடந்த ஆண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கிறது. ஆனால் நாங்கள் அதில் ஏற இயலுமா? என கேள்வி கணை தொடுத்தனர்.

எனவே அவர் சுமார் 10 மாணவர்களை தனது சொந்த செலவில் கடந்த வருடம் சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.

இந்த வருடம் தன்னிடம் படித்து விட்டு சென்ற பழைய மாணவர்கள் நாங்களும் உங்கள் மாணவர் தானே. எங்களுக்கு விமான பயணம் கிடைக்காதா? என்று கேட்க, பழைய மாணவர்கள் 8 பேர் மற்றும் தற்போது படிக்கும் மாணவர்கள் 10 பேர் என 18 மாணவர்களை தனது சொந்த செலவில் இன்று நவம்பர் 8 ம் தேதி விமானத்தில் சென்னை அழைத்துச் சென்றுள்ளார்.

ஆசிரியர் பொன்ராஜ் மற்றும் அவருடன் பணியாற்றும் இடைநிலை ஆசிரியை மாரிச்செல்வி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உடன் சென்றுள்ளார்கள்.

இந்த வருடம் மாணவர்கள் பயணம் சாதரணமாக இருக்க கூடாது. பயனுள்ளதாக வும் அதே வேளையில் தாமிரபரணி, ஆதிச்சநல்லூர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் பயண வடிவம் அமைத்தார். இதனால் ஒரே நாளில் மாணவர்கள் பலநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

அவர்களுடைய திட்டப்படி காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் சிறப்புரையாற்றி மாணவர்களை வழியனுப்பி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி, மாவட்ட கல்வி அலுவலர் தெட்சணாமூர்த்தி, தூத்துக்குடி ஊரக வட்டார கல்வி அலுவலர் மரிய ஜெயசீலா ஆகியோரும் மாணவர்களை வழியனுப்ப வந்திருந்தனர்.

விமானத்தில் ஏறியவுடன் முத்தாலங்குறிச்சி காமராசு, தான் எழுதிய தாமிரபரணி வரலாற்றில் முதல் முதலில் வெளிவருகின்ற நாவலான நீர்மம் குறித்து மாணவர்களிடம் அறிமுகம் செய்தார். 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தினை விமானம் சென்றடைந்தது.

மாணவர்களை சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்கத் தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் மணி ஆகியோர் வரவேற்று உரையாற்றினார்கள்.

அதன்பின் மாணவர்கள் மெட்ரோ ரயிலில் விமானநிலையத்தில் இருந்து நந்தனத்திற்கு பயணம் செய்து, 10 மணிக்கு அண்ணா நூலகத்தினை பார்வையிட்டார்கள் .

அங்கு ஊடகவியலாளரும், பேச்சாளருமான கோபாலகிருஷ்ணன் மாணவர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் கோளரங்கத்தினை கண்டு களிக்கிறார்கள்.

அங்கு சென்னை இந்துஸ்தான் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர். அபிஷ் விக்னேஷ் மாணவர்களின் உரையாடல் நடைபெறுகிறது.

அதன் பின் மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள தலைமை செயலகம், சென்னை மெரீனாபீச்சில் உள்ள தலைவர்கள் சமாதிகளை மாணவர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

தொடர்ந்து சென்னை சிப்காட் அலுவலகத்தில் வைத்து அதன் இயக்குனர் மருத்துவர்.செந்தில் ராஜ் உடன் மாணவர்கள் கலந்துரையாடல் செய்கிறார்கள்.

மாலை 4 மணி அளவில் கன்னிமாரா நூலகத்தில் உள்ள அருங்காட்சியகங்களில் ஆதிச்சநல்லூர் பொருள்களை பார்வையிடுகிறார்கள். காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து தோரணமலை முருகன்கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மாணவர்களை சந்தித்து பயணங்கள் குறித்து உரையாற்றுகிறார். அதன் பின் இரவு முத்துநகர் விரைவு இரயிலில் மாணவர்கள் தூத்துக்குடிக்கு திரும்ப இருக்கிறார்கள்.

மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மனதை மகிழ வைக்கும் விதமாக விமான பயணத்தினை ஏற்படுத்தி வரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜை கிராம மக்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மேலும் பல்வேறு அமைப்புகளும் இவரை பாராட்டி வருகிறார்கள்.

நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் கொரனா காலத்தில் தனக்கு கிடைத்த சம்பளத்தினை பள்ளி மாணவர்களுக்காக பண்டாரம்பட்டியில் கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.