கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கலை விழா :
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாம்பியன்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கலை விழாவான “Florent Fest’25” மிகுந்த எழுச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் நடைபெற்றது.
மாணவர்களின் படைப்பாற்றல், அறிவுத் திறன் மற்றும் கலை நுணுக்கங்களை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த விழாவில் வினாடி வினா, மெகந்தி, ரங்கோலி, டிபக்கிங் (Debugging), முக ஓவியம் (Face Painting), நக அலங்காரம் (Nail Art), எதிக்கல் வாக் (Ethical Walk), தீயில்லா சமையல் (Fireless Cooking), நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன.
தூத்துக்குடி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்துவமான திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தி விழாவை சிறப்பித்தனர்.

விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை வகித்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தலைமையுரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர். அண்ணாமலைசாமி சிறப்புரை நிகழ்த்தி, இத்தகைய கலை மற்றும் அறிவுத் திறன் சார்ந்த போட்டிகள் மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் சமூகப் பங்களிப்புக்கும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரியின் கணினி பயன்பாடுகள் முனைவர். திருமலைசாமி கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
போட்டிகளின் இறுதியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று முதலிடத்தை கைப்பற்றியது. விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த சாத்தூர் SRNM மற்றும் சிவகாசி SFR கல்லூரிகள் இரண்டாம் இடத்தை பெற்றன.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாவின் ஒருங்கிணைப்பாளர் சரண்யா, இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் லாவண்யா, கல்வி ஒருங்கிணைப்பாளர் அருணா தீப சுந்தரி, நிகழ்வின் செயலர் பாரதி, கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் அருண்குமார், வேலைவாய்ப்பு அலுவலர் முத்துராஜா, உடற்கல்வி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் ஏனைய பேராசிரியர்களும் மாணவர்ககளும் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர்.












