கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் “தொலைநோக்கு 2030: தொடக்க நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய தொழில்முனைவோரின் பரிணாமம்” என்ற தலைப்பில் ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி முன்னிலை வகித்து, தொழில்முனைவோரின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால தலைமுறையின் பங்கு குறித்து ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.

கருத்தரங்கில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வணிகவியல் துறை தலைவர் டாக்டர். ரேவதி மற்றும் பக்ரைன் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் நிதி அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் ஸ்டீபன் செல்லக்கண் ஆகியோர் பங்கேற்று, உலகளாவிய தொழில்முனைவோரின் புதிய வாய்ப்புகள், சவால்கள், மற்றும் புதுமைகளின் தாக்கம் குறித்து விரிவான சிறப்புரைகளை ஆற்றினர்.

இந்த பன்னாட்டு கருத்தரங்கில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மணிப்பூர், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், பக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளிலுமிருந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மொத்தம் 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் நிகழ்வில் வழங்கப்பட்டன.

கருத்தரங்கில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு, பல்வேறு அமர்வுகளில் கலந்துரையாடி, புதிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக தொடக்க நிறுவனங்களின் சமூக வளர்ச்சியில் பங்கு, டிஜிட்டல் யுகத்தின் சவால்கள், பெண்கள் தொழில்முனைவோரின் பங்கு, மற்றும் சர்வதேச சந்தையில் இந்தியாவின் நிலை போன்ற தலைப்புகளில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர் டாக்டர் லாவண்யா, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கீதாராணி, பேராசிரியர்கள் அருண்குமார், கனகம், முத்துராஜா, பவித்ராதேவி, செல்வமீனா ஆகியோர் செய்திருந்தனர்.

இவ்வாறான பன்னாட்டு கருத்தரங்குகள் மாணவர்களுக்குப் புதுமையான சிந்தனைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய தளத்தில் போட்டியிடும் திறனை வளர்க்கும் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்













