இன்று மே 11, அன்னையர் தினம்

இன்று மே 11, அன்னையர் தினம்

ஒரு தாய் கருவுற்று கருவை தனது வயிற்றில் 10 மாதங்கள் சுமந்து தனது ரத்தத்தை நஞ்சுக்கொடி மூலம் உணவாக தனது குழந்தைக்கு ஊட்டி பாதுகாத்து அந்த கருவை பூமியில் குழந்தையாக விழச் செய்கிறாள்.

தாய் நமக்கு இருக்கும் வரை தினமும் நமக்கு அன்னையர் தினம் தான்.

முன்பெல்லாம் ஒரு தாய் குழந்தையை பெற்றெடுத்து ஒன்றை வயது, இரண்டு வயது, மூன்று வயது வரை தாய்ப்பால் கொடுத்து குழந்தையை வளர்த்து வந்தார்கள். அந்த குழந்தையும் தாய்ப்பாலை குடித்து நோய் எதிர்ப்பு சக்தியுடன் நோயை எதிர்கொண்டு மிகவும் திடனுடன் வளர்ந்து வந்தது.

ஆனால் தற்போது உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அரிதாகி விட்டது. எனவே இந்த குழந்தைகள் திடனுடன் வளராமல் குழந்தை பருவத்திலேயே நோய் தொற்று அதிகமாகி, திடனற்று வளர்கிறது. எனவே அந்த குழந்தைக்கு சத்துள்ள உணவுகளை நாம் கொடுத்து வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் சத்துள்ள உணவை அந்த குழந்தை கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி கொடுத்து அந்த குழந்தையை திடம் இல்லாமல் நோய் நொடியிலும் பார்க்கின்றோம்.

வாழ்க்கைக்கு பணம் முக்கியம் தான் அதற்காக பணமே வாழ்க்கை அல்ல. இன்றைய பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் தான் குழந்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும்,வாழ்க்கையில் எல்லாவற்றையும் வாங்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் குழந்தையை அப்பா -அம்மா,அண்ணன் – தம்பி அக்கா- தம்பி, அண்ணன் – தங்கை, உறவுகள் என்ற பாசத்துக்கு மேலாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் அவர்களை நன்றாக படி என்று சொல்லி படிக்க வைத்து அவர்களை வெளி நாட்டிற்கு அனுப்பி அதிகமாக சம்பாதிக்க ஆசை காட்டி வேலைக்கு அனுப்புகிறார்கள்.

அந்த குழந்தையும் பாசத்தை காட்டிலும் நமக்கு பணம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக உறவுகளைத் தாண்டி, நாடுகளைக் கடந்து சென்று சம்பாதிக்கவும் செய்கிறது. இதுவே பெற்றோர்களுக்கு இறுதியில் துன்பத்தில் சென்று முடிவதற்கு முதல் காரணமாகும்.

அந்த குழந்தை வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து முதலில் பணத்தை மட்டும் பெற்றோர்களுக்கு அனுப்பி கொண்டிருக்கிறது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோர்களின் பாசம் இல்லாமல் பெற்றோர்களை மறந்து அங்கிருந்து பெற்றோர்களை பார்க்க தாய் நாட்டிற்கு வராமல் வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகிறது.தன் தாய்க்கும், தந்தைக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட அங்கிருந்து பணத்தை மட்டுமே அனுப்பி வைத்துவிட்டு அவர்களை பார்த்து ஒரு ஆறுதல் சொல்லாமல் தன் வேலையில் பணத்தை சம்பாதிப்பதில் மட்டுமே கறிக்கோளாக இருந்து வருகின்றனர்.

மேலும் சில குழந்தைகள் தன் பெற்றோர்கள் இறந்து விட்டால் கூட அங்கிருந்து இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனங்களுக்கு பணத்தை அனுப்பி அவர்களையே இறுதிச் சடங்கை செய்யுங்கள் என்று செய்ய சொல்கிறார்கள். கடைசி நேரத்தில் கூட தன் பெற்றோர்களுக்கு காரியங்களை செய்யாமல் தவிர்க்கும் அந்த குழந்தையை பெற்று என்ன பிரயோஜனம்?

எனவே பெற்றோர்கள் தனது குழந்தைக்கு சம்பாதிக்க கற்றுக் கொடுக்க வேண்டியது தான். அதற்காக பணம்தான் வாழ்க்கை என்று வெளிநாட்டுக்கு அனுப்புவது தாய், பிள்ளை என்ற உறவுக்கு இடைஞ்சலாக இருக்கின்றது.

தன்னை பெற்றெடுத்த தாய்,தகப்பனை உடல்நிலை சரியில்லாத போது வெளிநாட்டில் இருந்து வந்து பார்த்து அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து அவர்களுக்கு ஆறுதல் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவதை காட்டிலும் பணம் சம்பாதிப்பது தான் முக்கியம் என்ற எண்ணத்தில் இருக்கும் குழந்தையை நாம் என்ன சொல்வது? இதற்கெல்லாம் காரணம் இந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் தான் ஆகும்.

இந்த அன்னையர் தினத்தில் தாய் தந்தையை விட்டு பிரிந்து வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோ,வெளியூரிலோ தங்கி படிக்கும் அல்லது வேலை பார்க்கும் குழந்தைகள் தினமும் தன் தாய் தகப்பனுக்கு ஒரு கால் செய்து அல்லது ஒரு வாட்ஸ் அப்பில் அம்மா அப்பா எப்படி இருக்கிறீர்கள்? சாப்பிட்டீர்களா? மருந்து மாத்திரை சாப்பிட்டீர்களா? இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு வார்த்தை கேட்டால் அந்த தாய் தகப்பன் சந்தோஷப்படுவார்கள். உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தைக்கு வேறு என்ன வேண்டும்? இந்த ஒரு ஆறுதல் வார்த்தையை தான் அவர்கள் உங்களிடம் இருந்துஎதிர்பார்ப்பார்கள்.

ஆனால் தற்போது பெரும்பாலான குழந்தைகள் வெளிநாட்டில் இருந்து இறுதிச் சடங்கை செய்யச் சொல்லி பணத்தை அனுப்பிவிட்டு அல்லது மருத்துவ செலவுக்கு பணத்தை அனுப்பி விட்டு நான் வேலை பார்க்கிறேன் வேலை பார்க்கிறேன் என்று அங்கிருந்து பாசத்தை இழந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தன் குழந்தையை குழந்தை பருவத்தில் குழந்தைகள் காப்பகத்திலோ அல்லது விடுதியிலோ தங்க வைப்பது தான் காரணம்.

முன்பிருந்த பெற்றோர்கள் தன் குழந்தையை தன் கையில் வைத்து வளர்க்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் நல்ல ஒழுக்கத்துடனும், பண்புடன் வளருவார்கள் என்ற எண்ணத்தில் வளர்த்து வந்தார்கள். ஆனால் இப்போதுள்ள பெற்றோர்கள் பெரும்பாலான பெற்றோர்கள் தான் குழந்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் வளர்த்து அந்த குழந்தையை சம்பாதிக்கும் ஒரு மெஷினாகவே ஏற்பாடு செய்கிறார்கள். எனவேதான் அந்த குழந்தை இறுதி காலத்தில் பாசத்தையும் விட பணம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் வளர்கிறார்கள்.

நாம் அந்த குழந்தையை குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை.அந்த குழந்தை மனதில் பணம் தான் முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்கிய பெற்றோர்களை தான் நாம் சொல்ல வேண்டும். எனவே இப்போது பெற்றோர்களை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தைகள் தினமும் தன் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல வார்த்தையை அவர்கள் மனதில் சந்தோஷத்தை உருவாக்கும்படி ஒரு சில வார்த்தைகளை தினமும் அவர்களிடம் தொலைபேசியில் சந்தோஷப்படுத்துங்கள்.உங்கள் குரலை கேட்டால் மேலும் பல வருடங்கள் வாழ்வார்கள்.

தன்னைப் பெற்ற தாய் தகப்பனின் இறுதி சடங்கிற்கு அவர்களை வந்து பார்த்துவிட்டு செல்லாமல் இருப்பது நாம் சம்பாதித்து என்ன பிரயோஜனம்? ஒன்றை மட்டும் நினைவு கொள்ளுங்கள்.

இன்று நாட்டில் முதியோர் இல்லம் அதிகமாய் வருவதற்கு காரணமே பெற்றோர்கள் தன் குழந்தைகளை பணத்தை சம்பாதிக்க கற்றுக் கொடுத்து மனதில் அவர்களுக்கு ஆசையை ஏற்படுத்திக் கொடுத்தது தான் முக்கிய காரணமாகும். அதிலும் மிகவும் மோசமானது அனாதை விடுதிகள் அதிகமாகி விட்டன பெரும்பாலும் தாய்மார்கள் அந்த அனாதை இல்லத்தில் தான் தங்கி இருக்கிறார்கள். ஏனென்றால் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு கூட பணம் சம்பாதிக்கும் குழந்தைகள் தனது பெற்றோர்களுக்கு முதியோர் இல்ல செலவுக்கான பணத்தை கொடுப்பதில்லை.

இன்றைய குழந்தைகளே இன்றைய அன்னையர் தினத்தில் ஒரு வார்த்தையை இறுதியாக சொல்லிக் கொள்கிறேன். நம்மை பெற்றெடுத்த தாய் தகப்பனை நாம் பார்த்துக் கொண்டால்தான் நாம் இறுதி காலத்தில் நாம் நன்றாக இருக்க முடியும்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையரை கவனிக்கவில்லை என்றால் நாம் பிறக்கும்போது உயிருடன் அழுது கொண்டே நமது தேசத்தின் பூமியில் கீழே விழுந்தோமோ அதே போல நம் உயிர் இல்லாத உடலும் நம் தேசத்தின் பூமியில் கீழே விழ வேண்டும். நம் உடலை சுற்றி அழுவதற்கு சுற்றமும், நட்பும் இருக்க வேண்டும் நாம் அது தான் நாம் பிறந்து வாழ்ந்ததிற்கு அடையாளம்.நாம் பெற்றோர்களை கவனிக்கவில்லை இல்லை என்றால் நமது உயிரற்ற உடலை சுற்றி அழ யாரும் இருக்க மாட்டார்கள்.

க. பொன் பலவேச ராஜ்

ஆசிரியர்

கல்விச் செய்திகள் டாட் காம்